வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மூவருக்காக வாதாடிய.... மூன்றுபேரின் வாதம்.....விரிவாக...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன்
ஆகியோரது கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 11-ந் தேதி நிராகரித்தார்.
இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் வேலூர் ஜெயிலில் செப்டம்பர் 9-ந் தேதி தூக்கு
தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில்
போடுவதற்கான ஏற்பாடுகளை வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் செய்தனர். ஆனால் இந்த
தண்டனையை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பல்வேறு அரசியல் கட்சிகள், வக்கீல்கள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்துத்
தரப்பினரும் 3 பேரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து, போராட்டங்களை
நடத்தினார்கள்.


காஞ்சீபுரத்தில் செங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து உயிர் தியாகம்
செய்தார்.   இந்த நிலையில் 3 பேரின் உயிரைக் காப்பாற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
வைகோ, பழ.நெடுமாறன், தடா சந்திரசேகர் மற்றும் தமிழ் இன ஆர்வலர்கள் சட்ட ரீதியிலான
நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 3 பேரின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேற்று அப்பீல்
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை நீதிபதி என்.பால் வசந்தகுமார்
ஏற்றுக் கொண் டார். அவசர சூழல் கருதி மனுக்கள் மீது உடனடியாக இன்று விசாரணை
தொடங்கவும், அவர் ஒத்துக்கொண்டார்.


முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தங்கள் மனுவில், தங்களுக்கான தண்டனையை
ஏன் ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை தொகுத்து கூறி இருந்தனர். 11
ஆண்டுகள் கழித்து கருணை மனு மீது முடிவு எடுத்ததும், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும்
தண்டனை கொடுப்பதும் சட்ட விரோதமானது. எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்
என்று அவர்கள் மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.


இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை ஐகோர்ட்டில்
நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்
மற்றும் தமிழ் இன ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


ஐகோர்ட்டு நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில்
இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. 3 பேர் சார்பில் பிரபல மூத்த வக்கீல்கள்
ராம்ஜெத்மலானி, காலின் கான்சிலேஸ், வக்கீல் வைகை ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
ராம்ஜெத்மலானி வாதம் வருமாறு:-


ஒரு மரண தண்டனை கைதியின் கருணை மனு மீது முடிவு எடுக்க மிக நீண்ட கால தாமதம்
ஆனதற்காக அந்த கைதியின் தண்டனையை குறைக்க சுப்ரீம் கோர்ட்டு பல வழக்களில் தீர்ப்பு
கூறியுள்ளது.


இந்த வழக்கை பொறுத்தவரை தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் கருணை மனு மீது ஜனாதிபதி
முடிவு எடுக்க 11 ஆண்டுகள் 4 மாதம் கால தாமதம் ஆகி உள்ளது. இந்த கால தாமதத்தையே
இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான காரணமான எடுத்துக் கொள்ள
வேண்டும்.


ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. மரண தண்டனை
பெற்றவர்களின் கடைசி நிமிட தவிப்புகள் குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளேன். அந்த
புத்தகத்தை நீதிபதிகள் படித்து பார்க்க சமர்ப்பிக்கிறேன்.


இந்தியா வில் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்.


நீதிபதி சின்னப்பா ரெட்டி தனது தீர்ப்பில் கருணை மனு மீது முடிவு எடுக்க

2 1/2 ஆண்டுகள் கால தாமதம் ஆனதற்காக தூக்கு தண்டனையை குறைப்பதற்கு ஒரு காரணமாக
எடுத்துக் கொண்டுள்ளார்.


இந்த தீர்ப்பு குறித்து 11 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன
பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பில், கருணை மனு மீது முடிவு எடுக்க காலக்கெடு
நிர்ணயிக்க முடியாதே தவிர நீண்ட கால தாமதத்தை தண்டனையை குறைப்பதற்கான ஒரு காரணமாக
எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.


மரண தண்டனையை நிறைவேற்ற காலம் 30 நொடிகள் தான் ஆகும். ஆனால் இந்த 3 பேரின்
கருணை மனு மீது முடிவு எடுக்க 11 ஆண்டுகள் கால தாமதம் ஆனது மிகப் பெரிய தண்டனை
ஆகும்.


கருணை மனு மீது எப்படி முடிவு எடுப்பார்களோ என்று இவர்கள் நினைத்து, நினைத்து
செத்து பிழைக்கிறார்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரை கோர்ட்டு நடவடிக்கைகள் குறித்த
விசாரணை 1999. அன்றே முடிவடைந்து விட்டது. இவர்கள் கருணை மனு மீது தமிழக கவர்னர் 10
நாட்களில் முடிவு எடுத்து நிராகரித்து விட்டார்.


இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கருணை மனுவை மீண்டும்
பரிசீலிக்க கவர்னருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. 2-வது கருணை மனு மீது தமிழக கவர்னர்
5 மாதத்தில் முடிவு எடுத்தார். அதன் பிறகு ஜனாதிபதியிடம் 26-4-2000 அன்று கருணை மனு
தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது 11 ஆண்டுகள் 4 மாதத்துக்கு பிறகு முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே ஜனாதிபதிக்கு 5 தடவை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஜனாதிபதி
கருணை மனுவை நிராகரித்தது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21க்கு எதிரானது. வழக்கு
விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டத்தில்
வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அந்த உரிமையை மீறும் வகையில்
ஜனாதிபதி முடிவு எடுத்துள்ளார். இதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் 3 பேரும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு ராம்ஜெத் மலானி வாதிட்டார்.


இதையடுத்து காலின் கான்சிலேஸ் வாதாடுகையில் கூறியதாவது:- தூக்கு தண்டனையை
நிறைவேற்றுவதில் நீண்ட கால தாமதம் ஏற்படுத்தியதற்காக பல வழக்குகளில் சுப்ரீம்
கோர்ட்டு தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில், கருணை மனு மீது முடிவு
எடுப்பதில் மிக நீண்ட கால தாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாண்டுகள், நான்கு
ஆண்டுகள் கால தாமதம் ஏற்படுத்தியதற்காக சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு
தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ளது. குறைத்துள்ளது. இதற்கு தயாசிங் வழக்கு,
சேர்சிங் வழக்கு, மதுமேதா வழக்கு உள்பட பல வழக்குகள் முன் உதாரணங்களாக உள்ளன. இந்த
3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க இத்தனை ஆண்டுகள் கால தாமதம் ஆனதற்கான
காரணங்கள் கூறப்படவில்லை.


இவ்வாறு வக்கீல் காலின் கூறினார்.


வக்கீல் வைகை வாதிடுகையில், 3 பேருக்கும் விதித்த தூக்கு தண்டனையை
நிறைவேற்றுவது என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது என்றார்.   இதையடுத்து
நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் தீர்ப்பளித்தனர்.


தீர்ப்பு விவரம் வருமாறு:- மனுதாரர்களின் கருணை மனுக்களை பைசல் செய்வதற்கு 11
ஆண்டுகள் 4 மாதம் ஆனதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சட்ட கேள்வி
எழுந்துள்ளது. எனவே இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
மனுதாரர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரை தூக்கில் போட இடைக்கால தடை
விதிக்கப்படுகிறது. மனு குறித்து 8 வாரத்தில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க
வேண்டும்.


இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.


தமிழக அரசு, சிறைத்துறை ஐ.ஜி., வேலூர் ஜெயில் சூப்பிரண்டு சார்பில் அட்வகேட்
ஜெனரல் ஏ.நவநீத கிருஷ்ணன், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல்
எம்.ரவீந்திரன் ஆகியோர் நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர்.   இந்த வழக்கு விசாரணையை
பார்க்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மணிவண்ணன், சாகுல் அமீது மூத்த
வக்கீல் என்.நடராஜன், மனுதாரர் தரப்பு வக்கீல்கள் வைகோ, என்.சந்திரசேகரன்
வந்திருந்தனர். ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் திரளாக வந்திருந்தனர். தீர்ப்பை
கேட்டதும் அவர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.


என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். தமிழ் இன
உணர்வாளர்களும், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்த பல்வேறு அமைப்பு மற்றும்
கட்சிகளை சேர்ந்தவர்களும் கோர்ட்டு தீர்ப்புக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினார்கள். இதனால் இன்று காலை ஐகோர்ட்டு வளாகத்தில் தமிழ் இன
ஆர்வலர்களின் மகிழ்ச்சி வெள்ளம் கட்டுக் கடங்காதபடி இருந்தது.
                 



































                                                                              

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்