வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

முதல்வர் ஜெயலலிதா:கருணாநிதி வழியிலா..? காமராஜர் வழியிலா..


தமிழக முதல்வர் ஜெயலலிதா:கருணாநிதி வழியிலா..? காமராஜர் வழியிலா..?


தமிழக சட்டசபையில் புதிய ஆட்சியமைத்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே பொருத்தமான ஒரு தருணத்தில், சிறிலங்காவுக்கு எதிரான பொரளாதாரத் தடை விதிக்கப்ட வேண்டும் எனும் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம், அனைத்துத் தரப்பிலும் கவனம் பெற்றவர் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்துக்குள்ளிருந்து அவர் மேற்கொண்ட இலங்கைத் தமிழர்கள் தொடர்பான ஆதரவுச் செயற்பாடுகள், ஈழம், ஈழப்பிரச்சனை, என்பவற்றில் எதிர்நிலைச் செயற்பாட்டாளர் என்றவகையில் அறியப்பட்டிருந்த அவரது போக்கில் புதிய மாற்றம் காணப்பட்டிருப்பதாக அறிந்து கொள்ள வைத்தன.

இவை  தமிழகத்துக்குள்ளும், தமிழகத்துக்கு வெளியேயும், ஈழவிடுதலைப் போராட்ட ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அவர் குறித்த ஒரு புதிய பார்வையினையும், இறக்கமடைந்திருந்த இலங்கைத் தமிழர் அரசியல் குறித்த செயற்பாடுகளில் நம்பிக்கையையும் தோற்றுவித்தது என்பது மறுப்பதற்கில்லை.

இவ்வாறான நிலையில், ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்களில் ஒன்றான,  விடுதலைப்புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோருக்கான மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அது தவிர்க்கப்பட வேண்டும் என்ற போராட்டங்கள் தமிழகத்தில் வலுப்பெற்றிருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ள கருணை மனு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், அவர்கள் மீதான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட வேண்டும்  என்ற கோரிக்கைகளுக்கும் அப்பால்,  இந்த வழக்கு தவறான முறையில் விசாரிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அது மீள்விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப் பெற்றிருக்கின்றன.

இதேவேளை,  இவர்கள் மீதான தண்டனையை ஒரு வார காலத்துக்குள் நிறைவேற்றுமாறு இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.  இருபது வருட காலத்திற்கும் மேலாக  நிறைவேற்றப்படாதிருந்த இந்த மரண தண்டனைகளை,  இப்போது அவசர அவசரமாக நிறைவேற்ற எடுக்கப்படும் முயற்சிகள், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.

தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டதும்,  அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் முக்கியமானது இலங்கைத் தமிழர் விடயம் தொடர்பான மாநில புதிய அரசின் செயற்பாடுகள்  குறித்ததானது.  அக் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,  அது; இரு நாடுகள் சம்பந்த விடயமென்றும், ஆயினும் ஒரு மாநில அரசு என்ற வகையில் மத்திய அரசினூடாக தன்னால் முடிந்தவற்றை தமிழக அரசு செய்யும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அவ்வாறு குறிப்பிட்ட போது,  இந்த விவகாரத்தில் அவரது செயற்பாடு குறித்து சிறிதளவு நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தாலும்,  பல தரப்புக்களிலும் சந்தேகங்களே  வலுப்பெற்றிருந்தன. ஆனால் தமிழக சட்டமன்றத்தில் சிறிலங்கா அரசு மீதான பொருதாரதடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம்,  அந்த சந்தேகங்களை அசைத்து,  தமிழுணர்வாளர்கள் பலரை நம்பிக்கையூட்டியது. வெளிகாட்டிக் கொள்ள முடியாவிட்டாலும்,  இந்திய மத்திய அரசுக்கு இது பலத்த சவாலான விடயமாகவே இருந்தது.

இந்தியாவின் அனுசரணையில் நடைபெறும் யுத்தம் எனப் பகிரங்கமான அறிவிப்போடு, சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் மீதான யுத்தம் என இனப்படுகொலை புரிந்தபோது,  தாய் தமிழகத்திலும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும்,  அதற்கெதிரான கொந்தளிப்புக்களை  உருவாகலாம் என்ற அச்சம், இந்த யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பிலும் இருந்தபோதும், தமிழகத்தில் அவ்வாறு எழாதவாறு, தன் கூட்டணிக்கட்சியான திமுகவையையும் அதன் தலைமையைம், பேரங்களால் சமன் செய்து கொண்டது காங்கிரஸ் அரசு.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல், இப்போது பேரங்களல் தோற்ற திமுகவின் டி.ஆர் பாலு  நாடாளுமன்றத்தில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை பற்றிப் பேசுகிறார். போரின் பின் இலங்கை சென்று வந்து அவர்,  பாராட்டிய மகிந்த அரசின் உறுப்பினர்கள் தமிழக அரசியற் தலைவர்களை கோமாளிகள் எனச் சொன்னதை உண்மையாக்க முயற்சிக்கின்றாரா..? அல்லது நாமும் நாடாளுமன்றத்தில் பேசினோம் எனக் கலைஞர் புள்ளி விபரம் தெரிவிப்பதற்காகப் பேசுகின்றாரா..? அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மையது.

கூட்டணித் திமுகவை வைத்து,  தமிழகத்தை ஈழப்பிரச்சினை சரிக்கட்டிக் கொண்ட மத்திய அரசுக்கு ஜெயலலிதாவின் சட்டசபைத் தீர்மானம் நிச்சயம் எரிச்சலைத் தோற்றுவித்தே இருக்க வேண்டும்.  அதனை இலங்கை அதிபரின் சகோதர் தலைமையில்,  இலங்கை உறுப்பினர்கள், இந்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட போது,   அதிருப்தி தெரிவித்த அதிமுக உறுப்பினர்களை, சபை நாகரீகம் காக்க வேண்டும் என அதட்டி உட்கார வைக்கின்றார் சபாநாயகர் மீராகுமார். இது சபை நாகரீகம் என்று மட்டும் சுருக்கிக் கொள்ள முடியுமா தெரியவில்லை.  மாநிலசட்டசபையில் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும், மத்திய அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் இருக்காது என்பதை எடுத்துரைப்பதாகவும் இருக்கலாம்.

தற்போதைய தமிழக அரசின், இலங்கைத் தமிழர்கள் குறித்த அக்கறையால் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும், காங்கிரஸுக்கும்,  தமிழகத்தில் திமுக கட்டப்பஞ்சாயத்து ஆட்சி நடத்தியது அம்பலமாகி வரும் நிலையில், அவர்களுக்கும் இப்போதுள்ள தேவைகளில் முக்கியமானது தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் ஜெயலலிதா பின்னால் திரள்வது அல்லது அனுசரித்துப் போவது தவிர்க்கப்பட வேண்டியது.  இதை உடனடியாக நிறைவேற்ற எடுக்கபட்ட ஒரு விடயமாக இருபது ஆண்டு காலம் நிறைவேற்றாது கடத்தப்பட்டு,  இப்போது நிறைவேற்ற எடுக்கப்படும்  இந்த மரணதண்டனைமுயற்சிகளைக் கருதலாம்.

வன்னி இறுதிச் சமர்க்காலத்தில் தீக்குளித்த முத்துக்குமரன் என்ற தமிழுணர்வாளனின் மரணத்தில் திரண்ட தமிழகத்தின் உணர்வலைகளைக் கவனமாகதத் தடுத்துக் கொண்ட திமுகவும், காங்கிரசும்,  அதே உணர்வலைகளை  இப்போது இந்த மரண தண்டனைகள் மூலம் ஏற்படுத்த முனைவதாகக் கருத இடமுண்டு. ஏனெனில் இந்த மரண தண்டகைள் நிறைவேற்றப்பட்டால் கொதித்தெழக் கூடிய தமிழுணர்வாளர்களின் உணர்வலைகளோடு தமிழகத்தில் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வேலைகளை கும்பலோடு கும்பலாக எதிர் தரப்பினர் செய்ய முடியும். இதேவேளை தமிழுணர்வாளர்களால் ஜெயலலிதா பக்கம் கட்டியெழுப்பட்டிருக்கும் நம்பிக்கைகளை சிதைத்திடவும் முடியும். இவற்றின் மூலம் அதிமுக அரசுக்கு பலத்த நெருக்கடிக்களைத் தமிழகத்தில் தோற்றுவிக்க  முடியும்.  அதனால் இந்த மரண தண்டணைகள் துரிதப்படுத்துவதாகவும் கொள்ளலாம்.

ஊழல் மோசடிகளில் சிக்கித் தினறும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், திமுக இரண்டும், தங்களது செய்பாட்டுத் தோல்வியைச் சிறிய கோடாக காட்ட, போடப்படும் பெரிய கோடாகவும் இந்த மரணதண்டனை நிறைவேற்றங்கள் இருக்கலாம்.

இவை தவிர,  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு பட்டிருக்கக் கூடியவர் எனச் சந்தேகிக்கப்படக் கூடிய கேபி எனும் குமரன் பத்மநாதனை பொன்முட்டை வாத்தாகப் பாதுகாத்து, இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசை எதிர்கொள்ள,  இந்த வழக்கின் விசாரணைகள் மீள நடத்தக் கூடிய சாட்சியமாக குமரன் பத்மநாதன் இருக்கின்றார் என்ற வாதங்கள் வலுப்பெற்று வருகையில், இந்த வழக்கின் தீர்ப்பை நிறைவேற்றி, அந்த வழக்கினை முற்றுப் பெறச் செய்ய முனைவதாகவும் இருக்கலாம்.

இவ்வாறு பல இருக்கலாம்களில் ஏதோ ஒன்றிலோ அல்லது இங்கு தெரிவிக்கப்படாத இன்னும் ஏதாவது ஒரு இருக்கலாமிலோ இந்தத் தண்டணை நிறைவேற்றப்படுவது உலகெங்கிலும் நிறைந்திருக்கினற தமிழர்கள் முன் இந்திய அரசு வைக்கின்ற எச்சரிக்கை என்பதிலும் பார்க்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியதிகாரத்துக்கு முன் மத்திய அரசு வைக்கின்ற நிர்ப்பந்தம் அல்லது சவால் என்று சொல்வது பொருத்தமானதே.

இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார் என்பதில்தான் தமிழக அரசின் எதிர்காலச் செயற்பாடுகளும்,  அவை தமிழர் நலன் குறித்தனவா என்ற நம்பிக்கைகளும் உருவாகும் என்கிற நிலை தோன்றியுள்ளது. அமெரிக்க இராஜங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்திய வந்தபோது, தமிழக முதல்வரைச் சந்திதுப் பேசியது முக்கியமாகச் செய்திகளில் வெளிவந்தது. ஆனாலும் அவர் என்ன பேசினார் என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஆனால் இவை எல்லாவற்றுக்குமான விடை இந்த விவகாரத்தில் ஜெயலலிதா எடுக்கப் போகும் நடவடிக்கையில் தெரிந்துவிடும்.

சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையினைச் சட்ட மன்றத்தில்  தீர்மானமாக நிறைவேற்றிய தமிழக அரசு, அதே சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை பேசுவதைத் தவிர்த்து வருகிறது. இது தொடர்பாக இன்று சட்டசபையில் பேச முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, அந்த வாய்ப்பு மறுக்கபட்டிருக்கிறது. ஆனால் அவர் இது குறித்து தனியே பேசவருமாறு சபாநாயகர்  அழைப்புவிடுத்திருக்கிறார். இதுபோலவே எதிர்கட்சித் தலைவர் விஜயகாந் மேற்கொண்ட முயற்சி ஒன்றும் அமைதிப்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.  சபையில் வீண் வாதங்களைத் தவிர்ப்பது என்பதற்கும் அப்பால் இது தொடர்பில் ஆளுந்தரப்பின் யோசனையை சபையில் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என்பதாகவும் இருக்கலாம். அல்லது இது விடயம் தொடர்பில் ஏதோ ஒரு முடிவு தமிழக மற்றும் மத்திய அரசுக்கு இடையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கலாம்.

எது எப்படியாயினும்,  தமிழகத்தில் கடந்த நூறு நாட்களில் புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்திருக்கிறது எனச் சொல்லப்படுகின்ற அதிமுக ஆட்சியின் முன், பெரும் சவாலாக இருக்கும் இந்த விடயத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா முன் இருப்பது இரண்டேயிரண்டு வழிமுறைகளே.  காங்கிரஸ் தலைவர் காமராஜர் மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்பட வகையில் மரணதண்டனைத் தீர்ப்பினை ஆயுள் தண்டனையாக மாற்றியது முதல் வழிமுறை  என்றால்,  இரண்டாவது வழிமுறை கருணாநிதி போல் மத்திய அரசின் எண்ணத்தோடு உடன்பட்டு,  மரணதண்டனை நிறைவேற்றத்தை ஏற்றுக் கொள்வது.

ஹிலாரி பேச்சுவார்த்தையில் ஜெயலலிதாவுக்குக் கொடுத்தது 'ஷாக்‌' ட்ரீட்டா..? 'ஸாக்லெட்' ரீட்டா..? தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவு செய்யப்போவது காமாரஜர் வழியையா..? அல்லது கருணாநிதி வழியையா..? அல்லது இவையிரண்டும் அல்ல சூப்பர் ஸ்டார் பாணியில் என் வழி தனிவழி என புதிய வழியில் தீர்வு காண்பாரா...?
                                                                                                           நன்றி      - 4தமிழ்மீடியா

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்