வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ரூ.70 ல் 90 சானல்கள்...அரசு கேபிள் டி.வி

                                                                  
                                                            செப்.2 ல்...

                                    70 ரூபாய் கட்டணத்தில்  90 சேனல்கள் ... 

      
 முதல்- அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ்   சட்டசபையில்  வாசித்த அறிக்கையில் :-

கேபிள் டி.வி. இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும், இதன் காரணமாக இந்த தொழிலில் ஏகபோக நிலையை ஏற்படுத்தியவர்கள் அதிக லாபம் பெற்று வருகின்றனர்  என்பதையும், இந்த மாமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

முந்தைய அரசால் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தனது ஒளிபரப்பை தொடங்கியது. இந்த நிறுவனம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகளை வழங்கியது. பின்னர் முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம் காரணமாக அரசு கேபிள் டி.வி. நிறுவன இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 31.3.2011 அன்றைய நிலவரப்படி 432 இணைப்புகளாக சுருங்கி விட்டது.

அதாவது முந்தைய தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அந்த அரசாலேயே முடக்கப்பட்டு விட்டது. எனவேதான் அ.தி. மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கேபிள் டி.வி. தொழிலில் உள்ள ஏக போகத்தை தடுத்து அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு அளிக்கும் வகையிலும், அனைத்து மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்பு கொடுக்கும் வகையிலும், நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம்.

இந்த தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நடவடிக்கை களை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும எனது அரசு தீவிரமாக மேற்கொண்டது. இந்நிறுவனத்திற்கு ஒரு முழு நேர தலைவர் மற்றும் இந்திய ஆட்சிப் பணியை சேர்ந்த ஒரு நிர்வாக இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஏற்கனவே தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம் புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில் நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்கும் பொருட்டு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.

31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பின் மூலம் கட்டணச் சேனல்கள் உள்பட 90 சேனல்களை ஒளிபரப்பிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.

கட்டணச் சேனல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் கட்டணச் சேனல்களும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மூலம் வழங்கப்படும். 2.9.2011 முதல் ஒளிபரப் புச்சேவைகள் தொடங்கப்பட்டு குறைந்த செலவில் நிறைவான சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தமிழக மக்களுக்கு வழங்கும் என்பதையும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையை பெறும் சந்தாதா ரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக 70 ரூபாய் மட்டுமே கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஒளிபரப்பை வழங்கும் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களிடமிருந்து கட்டணமாக ஒரு இணைப்பிற்கு 20 ரூபாய் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் வசூலிக்கப்படும். எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. இணைப்பை தமிழக மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு சுமார் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்