வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 18 நவம்பர், 2013

ஈமுக்கோழிகளின் விலை ரூ 10. ஈரோடு மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி.




டந்த 2010 களில்  ஈரோடு மாவட்டத்தில் ஈமுக்கோழிகள்
வளர்ப்பு தொழில் சக்கைபோடு போட்டது.
இந்த தொழிலில்  நூற்றுக்கணக்கான மக்கள் முதலீடு செய்தனர்.

அப்படி முதலீடு செய்திருந்த பலர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வந்த சுசி ஈமுக்கோழி நிறுவனத்திடம் ஆகஸ்ட் 6 ம் தேதி 2012ம் அன்று தாங்கள் முதலீடு செய்திருந்த பணத்தை திருப்பிக்கேட்டு முற்றுகையிட்டனர்.

அப்பொழுது முதலீட்டர்களுக்கு பணத்தை தரமுடியாமல் தவித்த சுசி ஈமு நிறுவனத்தின்  உரிமையாளர் குரு என்கிற குருமூர்த்தி தலைமறைவானார்.
இதன் விளைவாக அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதன் எதிரொளியாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த 42 நிறுவனங்கள் மூடப்பட்டன.

இதன் தாக்கமாக இந்த தொழிலில் முதலீடு செய்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் பணம் ரூ225 கோடியை ஈமுக்கோழி நிறுவனங்கள் மோசடி செய்துவிட்டன எனக்கோரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் தந்தனர்.

 இந்தப்புகார்களின் பேரில் 76 பேர் கைது செய்யப்பட்டனர். 154பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுசி ஈமு நிறுவனத்தின் மீது மட்டும் 3 ஆயிரத்து 430 பேர் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் மதிப்பு ரூ94 கோடியே 82 ஆயிரத்து 722 ஆகும்.

பொருளாதார குற்றப்பிரிவு போலிசாரின் அதிரடியால் ஈமுப்பண்ணைகள் மற்றும் அதன் அசையும் அசையா சொத்துக்களுடன் ஈமுக்கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இப்படி பறிமுதல் செய்யப்பட்ட கோழிகளை தமிழக அரசு கால்நடைத்துறையின் கவனிப்பில் வைத்திருந்தது.
இந்தக்கோழிகளை ஏலத்தில் விற்பனை செய்ய பொருளாதார மோசடிகளை விசாரித்துவரும் கோவை டான்பிட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதன்பேரில் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்துறையினர்  சுசி நிறுவனத்தில் பறிமுதல் செய்த 4 ஆயிரத்து 600 ஈமுக்கோழிகளை விற்பனை செய்வதற்கான ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் பொருளாதார குற்றப்பிரிவின் ஏ.டி.எஸ்.பி ஜெகநாதன், உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஈமுக்கோழிகளை ஏலத்தில் எடுக்க திண்டுக்கல்லைச்சேர்ந்த வி.ஆர்.3 என்ற கால்நடை தீவன தொழிற்சாலை உரிமையாளர் ராம்ராஜ், பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் பட்டக்காரன்பாளையத்தைச்சேர்ந்த நல்லசாமி ஆகிய இருவரும் வந்திருந்தனர்.

திண்டுக்கல் நிறுவன உரிமையாளர் ஒரு கோழியை ரூ10க்கும், நல்லசாமி ரூ36க்கும் விலை நிர்ணயம் செய்தனர்.

கடந்த2011 12 களில் ஒரு கோழி ரூ36 ஆயிரத்துக்கு விற்பனை ஆன  நிலையில் தற்போது ரூ 10 மட்டும் தான் அதன் விலை என்பதைக்கண்டுஅதிர்ச்சியான  மாவட்ட வருவாய் அதிகாரி கணேஷ், கோழியின்   விலையை உயர்த்தக்கோரினார். இதனை ஏற்ற ஏலதாரர்கள் தலா ஒரு கோழி ரூ 50 என விலை நிர்ணயம் செய்தனர்.

 இதனை அதிகாரிகள் ஏற்றதால் திண்டுக்கல் நிறுவன <உரிமையாளர் 3 ஆயிரத்து 696 கோழிகளையும், நல்லசாமி 800 கோழிகளையும் ஏலத்தில் எடுத்தனர்.
இத்துடன் ஈரோடு மாவட்ட நிர்வாகம் ஈமுக்கோழிகளை பராமரித்து வந்த நிலை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்