வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 12 செப்டம்பர், 2011

கொடுமுடியில் சாலை மறியல் போராட்டம்...

ஒப்பந்தத்தை நிறைவேற்ற
மறுக்கும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக்
கண்டித்து செப்.17-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் கொடுமுடி ஒன்றிய செயலாளர் எம்.குணசேகரன்
செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
   கொடுமுடி பகுதி பொதுமக்களை ஈரோடு மற்றும் கரூர் பஸ் நிலையங்களில்
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பஸ்களில் ஏற்ற மறுத்ததைத் தொடர்ந்து கடந்த
அக்டோபர்-09 ம் மாதம் பொதுமக்கள் கொடுமுடியில் சாலை மறியல் நடத்தப்
போவதாக அறிவித்தனர்.
   அதனைத் தொடர்ந்து கடந்த 30.10.09-ல் கொடுமுடி மகுடேஸ்வரர் திருமண
மண்டபத்தில் ஈரோடு மாவட்ட வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை
நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர், ஈரோடு திருச்சி, திண்டுக்கல்,
மதுரை,கும்பகோணம் கோட்டம் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள்
மற்றும் கொடுமுடி பகுதி பொதுமக்கள், உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு,
அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இதில் கரூர், ஈரோடு பஸ் நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து
அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் கொடுமுடி பயணிகளை ஏற
அனுமதித்து உட்கார வைத்து அழைத்து வருவது, மதுரை மற்றும் தொலைதூரப்
பேருந்துகளில் கடைசி 9 இருக்கைகளை கொடுமுடி பயணிகளுக்கு ஒதுக்கி தந்து
விடுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற போக்குவரத்துக் கழக
அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
    இந்த ஒப்பந்தத்தை மீறும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது
கடுமையான நடவடிக்கை எடுத்து, அவர்களை துறை ரீதியாக பணி நீக்கம் செய்ய
பரிந்துரை செய்யப்படும் என அனைத்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும்
உறுதி கூறினர். மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல்
பேருந்துகள் விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை அதிகாரிகள் கூடுதல் பேருந்துகளும் விடவில்லை, பஸ்
நிலையங்களில் பயணிகளை ஏற்ற மறுப்பதும் தொடர்கதையாக உள்ளது.
   பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் எனப் பாகுபாடின்றி அனைத்து
தரப்பினரையும் பஸ்ஸில் ஏற்ற மறுத்து கீழே இறக்கி விடுகின்றனர்.  ஓட்டுனர்
மற்றும் நடத்துனர்களிடம் ஏன் கொடுமுடி பயணிகளை அனுமதிக்க மறுக்கிறீர்கள்
என்று கேட்டால், இந்த பஸ் கொடுமுடி வழியாக போகாது, மேல் ரோடு வழியாக
போகிறது, தனியார் பஸ்களுக்கு போங்கள் என்று கூறிவிடுகின்றனர் என
பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
   எனவே, அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை நிறைவேற்ற மறுக்கும் அரசு
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கண்டித்தும், பயணிகளை
பஸ்ஸில் ஏற்ற வலியுறுத்தியும் செப்.17-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சார்பில் கொடுமுடியில் சாலை மறியல் நடைபெறும்.






     

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்