வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 13 நவம்பர், 2013

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் செயல்பட தடை


.

ரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஆட்டுச்சந்தைகள் மற்றும் மாட்டுச்சந்தைகளை
தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர்  சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கால்நடைகள் அதிக அளவில் கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் கால்நடைகள் ஒரே இடத்தில் கூடுவதாலும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதாலும் மிகவேகமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் கருங்கல்பாளையம், கனகபுரம், கோபி, மொடச்சூர், பெருந்துறை, சீனபுரம், சிவகிரி, அந்தியூர், மைலம்பாடிசனிசந்தை, கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், சிறுவலூர், புளியம்பட்டி, புதுச்சந்தை, உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் அனைத்து கால்நடை சந்தைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி தற்காலிமாக இச்சந்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தவிர வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் கால்நடைகளை கொண்டு வருவதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு கோமாரிநோய் வராமல் தடுப்பதற்காக கால்நடைகளை கட்டி வைக்கும் கொட்டகைகளை சுற்றிலும் சலவை சோடா, பிளிச்சிங் பவுடர் தூவி நோய்கிருமிகளை அழிக்கவேண்டும், மேலும் கிராமங்கள் தோறும் நடைபெறும் கால்நடை மருத்துவ முகாமில் தங்களது கால்நடைகளை கொண்டு சென்று தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் பரவமால் தடுக்கவேண்டும்.

கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளை புதைக்கவோ, எரிக்கவோ வேண்டும். எந்த காரணம்கொண்டும் கால்நடைகளை பொதுநீர் நிலைகளிலோ, கால்வாய், ஏரி, குளம், குட்டைகளிலோ போடக்கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மீது ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கோமாரி நோய் தடுப்பு தொடர்பாக ஒவ்வொரு வட்டாரத்திலும் அப்பகுதியை சார்ந்த  கால்நடை உதவி மருத்துவர், ஊராட்சி மன்ற தலைவர், கிராமநிர்வாக அலுவலர், பேரூராட்சி செயல்அலுவலர், ஆகியோர் அடங்கிய ஆலோசனைக்கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தாலுகா அளவில் உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்ட மேற்பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மண்டல இணை இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆகியோர் கொண்ட குழு வாரந்தோறும் கண்காணித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்