வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 21 நவம்பர், 2011

மாடுகள் கொத்து கொத்தாக...

                                                     
ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் இனம் புரியாத நோயால்
கால்நடைகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் பால் உற்பத்தி குறைந்துள்ளதுடன் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்கும் உள்ளாகி வருகின்றனர்.

சிவகிரி பகுதியில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை குறிப்பாக மாடுகளை இனம் புரியாத நோய் தாக்கி வருகிறது. இந்த நோயினால் மாடுகள் கொத்து கொத்தாக இறந்து வருகின்றன.

இதனால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையம் என்ற கிராமத்தில் முதலில் தோன்றிய இந்த நோய் அந்த கிராமத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாடுகளை காவுகொண்டது.

இன்னும் அபாய கட்டத்தில் அந்த கிராமத்தில் பல மாடுகள் உள்ளன. இந்த நிலையில் சிவகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் வேகமாக மாடுகள் இறந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

மாவட்ட கால்நடைத்துறை மாடுகள் இறப்பதை தடுக்க பல குழுக்களை அமைத்து எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் கை கொடுக்கவில்லை.
 கோமாரி நோய்கான அறிகுறிகளுடன் துவங்கிய இந்த நோய் முதலில் கோமாரி என அறிவிக்கப்பட்டது. தற்போது பல  இடங்களில் இனம் புரியாத நோயாக உணரப்பட்டுள்ளது. இது விவசாயிகளை மட்டும் அல்லாது கால்நடை மருத்துவர்களையும் குழப்பி வருகிறது.

இதனால் இந்த நோயை தடுப்பதற்கான முயற்சியில் கால்நடை மருத்துவர்கள் இறந்த மாடுகளை பிரேத பரிசோதனைகளுக்குட்படுத்தி வருகின்றனர்.
இந்த பரிசோதனையில்  இனம் புரியாத நோய் என்பது மட்டும் தற்போது தெரியவந்துள்ளதாக மாடுகளை இழந்த சம்பந்தப்பட்ட விவசாயிகள் கூறிவருகின்றனர்.

புதுவிதமான நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள்  உயிர்வாழ்வதே ஆச்சர்யம் என்ற நிலையில் உள்ளதால் பால் உற்பத்தி  முற்றிலும் குறைந்துள்ளது.
நோய்தாக்காத மாடுகள் சிலவற்றில் இருந்து பெறப்படும் பாலையும் மக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

சிவகிரி, மாரப்பம்பாளையம், ரங்கசமுத்திரம், அறச்சலூர், வீரசங்கிலி, வேட்டுவபாளையம், தொப்பபாளையம், வேலாயுதம்பாளையம்,கோட்டைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக பரவிவரும் இந்த நோய் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளதால் விவசாயிகள் கலக்கத்துள்ளாகியுள்ளனர்.

நேற்று இரவு சிவகிரி அருகே உள்ள கோட்டைப்புதூரைச்சேர்ந்த கரைக்காட்டுத்தோட்டத்தில் வசிக்கும் விவசாயி முருகேசன் என்பவரது மாடு திடீரென இறந்துள்ளது. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தேங்காய் சுப்பிரமணி என்பவரது  இரண்டு மாடுகள் இறந்தன.

இந்த கிராமத்தில் மூன்று நாட்களுக்குள் மூன்று மாடுகள் இறந்துள்ளன.
வேகமாக மாடுகளை தாக்கி இறக்கச்செய்யும் இந்த நோயை கண்டுபிடித்து  தடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுப்பதுடன் நோயினால் மாடுகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்