வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 25 நவம்பர், 2011

பலி வாங்கிய பாதை

                                                    

ஈரோடு மாவட்டம்
கொடுமுடி யூனியனில் உள்ள கிளாம்பாடி பஞ்சாயத்தில் உள்ள காளிங்கராயன் கால்வாயின் வெள்ளத்தடுப்பு மதகுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர்
முக்கிய பாதையை அரித்துச்சென்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.


கிளாம்பாடி பஞ்சாயத்தில் உள்ளது சொக்கநாச்சியம்மன்கோயில். 600 ஆண்டுகள் பழமையான இந்தக்கோயிலுக்கு சில மீட்டர் தொலைவில் காளிங்கராயன் கால்வாய் செல்கிறது. இந்தக்கால்வாயின் 36/6 வது மைலில் அவசரகால வெள்ளத்தடுப்புக்காக அமைக்கப்பட்டமதகுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரானது பஞ்சாயத்து பாதையை பல மீட்டர் தொலைவுக்கு அரித்துசென்றுவிட்டதால் பாதையில் போக்குவரத்து தடைபட்டு வருகிறது.

இதனால் கோயிலுக்கும் விவசாயபணிகளுக்கும் அருகில் உள்ள சாணார்பாளையம், பாம்பகவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், முனியப்பம்பாளையம், சோளங்காபாளையம் ஆகிய ஊர்களுக்கும் செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.



பாதையை ஒட்டி காவிரிக்கு செல்லும் வெள்ளதடுப்புநீர் பாதையை பலமீட்டர் உயரத்துக்கும் அகலத்துக்கும் அரித்துச்சென்றதை அரியாததால் கோயிலுக்கு வந்த கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த ஒரு பக்தர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த சம்பவத்துக்கு பின்னரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அபாயபாதையை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.


இதனால் ஈரோடு மாவட்டப்பகுதியில் வசிக்கும் மக்கள் அல்லாது நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த மக்களும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் காவிரியின் கரையில் அமைந்துள்ள கிராமங்களான நாய்க்கனூர், அரசம்பாளையம், வடுகனூர், உள்ளிட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்கள் ஈரோட்டிற்கு செல்ல அக்கறையிலிருந்து ஈரோடு மாவட்டத்தில் கிளாம்பாடி பஞ்சாயத்தில் அமைந்துள்ள நத்தமேடு பரிசல் துறைக்கு வந்து அங்கிருந்து சொக்கநாச்சியம்மன்கோயில் அருகே அமைந்துள்ள இந்த பாதையின் வழியாக ஈரோட்டிற்கு செல்வது வழக்கம்.

பாதை நீர் அரிப்பிற்கு உள்ளாகி ஆபத்தான பாதையாக அவதாரம் எடுத்து  ஆண்டு ஒன்றாகிறது. இந்த ஒரு ஆண்டிற்குள் அதன் ஆரோக்கியம் பல முறை சீரழிந்து சின்னாபின்னமான பின்பும், போதாக்குறைக்கு உயிர்ப்பலி வாங்கிய பின்பும் பாதை சீரமைப்பதற்கான பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட பகுதியை தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் பார்வையிட்டபின்னர் பாதையையும் பாலத்தையும் சீரமைப்பதற்கு ரூ15 லட்சத்தை முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிதி ஒதுக்கப்பட்ட பின்பும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இதனால்  மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகிவருகின்றனர். அவர்களின் துயரம் களைய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?!

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்