வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 1 அக்டோபர், 2013

அரசு மருத்துவ மனைக்கு பணியாளர்கள்...


                                                                           


ஐ.எஸ்.ஓ தரத்துக்கு இணையாக செயல்பட்டுவரும் அரசு மருத்துவ மனைக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால்
பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம்
கொடுமுடியில்   சுல்தான் பேட்டையில் உள்ளது அரசு மருத்துவமனை. 26 ஆயிரத்து 450 சதுரமீட்டரில் அமைந்துள்ள இந்த அரசு மருத்துவமனை கடந்த 1954 முதல் கொடுமுடி யூனியன் மருத்துவமனையாக செயல்பட துவங்கியது. பின்னர் 1961 ல் அரசு மருத்துவனையாக தரம் உயர்த்தப்பட்டது.

 முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் கொடுமுடியைச்சேர்ந்த பி.சி.ராமசாமி அறநிலையத்துறை அமைச்சசராக பதவி வகித்தபோது 2005 ல் இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

பின்னர் வந்த தி.மு.க ஆட்சியில் இந்த மருத்துவமனைக்கு சில சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டது. சென்ற முறை மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஆர்.எம். பழனிச்சாமி இந்த மருத்துவனைக்குசமையல் கூடம் ஒன்றை தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து கட்டித்தந்ததுடன்  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தினசரி உணவு அளிப்பதற்கான ஏற்பாட்டினை காங்கிரஸ் கட்சியின் சார்பில் செய்து தந்தார்.

ஐந்து ஆண்டுகளாக அவர் எம்.எல்.ஏ.,வாக பதவிவகித்த காலத்தில் இந்த மருத்துவனைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசஉணவு தினசரி வழங்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு625 நோயாளிகள் வரை இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். இப்படி வரும் நோயாளிகளில் பலர் திருச்சி, கரூர், காங்கேயம், திருச்செங்கோடு பகுதிகளிலிருந்து வருகின்றனர். வெளியூர் மற்றும் வெளிமாவட்ட மக்களின் மனங்கவர்ந்த சேவைகளை செய்துவரும் இந்த மருத்துவனையில் எங்கு பார்த்தாலும் சுத்தம்…சுத்தம்…சுத்தம்… என்று சொல்லும் அளவுக்கு
சுகாதாரமாக காட்சி தருகிறது.
தனியார் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளுக்கு சவால்விடும் அளவுக்கு சுத்தத்திலும் நோயாளிகளை கவனிப்பதிலும்  செயல்பட்டுவருகிறது இந்த மருத்துவனை.
இருந்தபோதிலும் இந்த மருத்துவனைக்கு சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனை மக்கள் பிரதிநிதிகளும் அரசும் தலையிட்டு தீர்க்க முன்வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பல்,காது,மூக்கு, தொண்டை, மகப்பேறு மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைநல மருத்துவம், அறுவை அரங்கு, இதயஅலை வரைபட வசதி உள்ளிட்ட வசதிகளுடன் இயங்கும் இந்த மருத்துவனையில் அரசு 32 படுக்கைகளை ஒதுக்கி தந்திருந்தபோதிலும் 64 நோயாளிகள் ஒரே நேரத்தில் அட்மிட் ஆகி சிகிச்சை பெறும் அளவிற்கான படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன.

காலையில் பால், பகலில் சாம்பார், தயிர், மற்றும் பொறியல், கூட்டு, உள்ளிட்டவைகளுடன் நோயாளிகளுக்கு சாதம் வழங்கப்படுகிறது. மாலையில் கிச்சடி, முட்டை, வாழைப்பழம், கேரட் உள்ளிட்டவைகளுடன் உணவுகள் வழங்கப்படுகிறது.

24 மணிநேரமும் செயல்படும் இந்த மருத்துவனைக்கு போதுமான பணியாளர்கள் இல்லை என்பதே வருத்தமான விஷயமாக உள்ளது.அறுவை அரங்குக்கு டெக்னிகல் அஸிஸ்டெண்ட் இல்லை, அதேபோல, ஆண் செவிலியர் உதவியாளர் இல்லை, மருத்துவமனை பணியாளர்  இருவர் தேவை. நோயாளிகளுக்கு உணவுவழங்குவதற்கான சமையலை செய்ய  அரசால் நியமிக்கப்பட்ட சமையலர் இல்லை, மருந்தாளுனர் தேவை, மகப்பேறு உதவியாளர் துணை செவிலியர் இல்லை.

சிவகிரி, கொடுமுடி, மலையம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள போலிஸ் ஸ்டேசன்களில் பதியப்படும் பல்வேறு வழக்குகளில் மருத்துவ சிகிச்சை மற்றும் பிரேத பரிசோதனைகள் குடிபோதையில் வாகன ஓட்டிய வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சம்பந்தமான சான்றுகள் பரிசோதனைகள், உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த மருத்துவனையிலே மேற்கொள்ளப்படுவதால் அலுவலக பணி சுமை அதிகம் உள்ளது.

இதற்கு போதுமான அளவில் பணியாளர்கள் இல்லை அதனால் அலுவலக உதவியாளர் ஒருவர் அவசியம் தேவைப்படுகிறது. அத்துடன் எக்ஸ்ரே யூனிட்டும் தேவைப்படுகிறது.

இத்தனை தேவைகள் மற்றும் பற்றாக்குறைகள் இருந்தும் இந்த மருத்துவனை மக்களால் விரும்பபடும் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவனைபணிக்காக வரும் பல நிலை அலுவலர்களும் பணியாளர்களும் தங்களது சேவையை முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வருவதால் பல தேவைகளுக்கும் மத்தியில் இந்த மருத்துவ மனை சிறப்பாகஇயங்கிவருகிறது. இந்த இயக்கம் தடையின்றி தொடர தேவையான வசதிகளை அரசு அளித்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். அவர்களது நியாயமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அரசு முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்