வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 29 டிசம்பர், 2011

ரூ127.4 கோடி வீண்

                                                             
திருப்பூர் சாயக்கழிவு நீரை பூஜ்ய நிலைக்கு கொண்டுவர தரப்படும் ரூ127.4 கோடி வட்டியில்லா கடன் வீணாகும் என தமிழ்நாடு கள் இயக்கத்தலைவர் நல்லசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

திருப்பூரில் இயங்கி வந்த 754 சலவை மற்றும் சாய தொழிற்சாலைகள் மற்றும் 20 பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வெளியேற்றி சாய சலவை கழிவு நீரால் நொய்யல் ஆறும், அதன் பாசனபரப்பும் செத்துப்போனது.

இதனால் நொய்யல் விவசாயிகள் சொந்த மண்ணிலேயே அகதிகள் ஆக்கப்பட்டார்கள்.

இதன் காரணமாக நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவு நீர் பூஜ்ஜிய நிலையை எட்டும் வரை  சாயப்பட்டறைகள் மூடப்பட்டிருக்கவேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதனால் திருப்பூரில் இயங்கி வந்த 700க்கும் மேற்பட்ட சாய சலவைத்தொழிற்சாலைகளும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டன.

2011 தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா  இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அப்போது தீர்வு எதுவும் ஏற்படவில்லை.

தற்போது 15 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரூ127.4 கோடியை வட்டியில்லா கடனாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பொது சுத்திகரிப்பின் மூலம் பூஜ்ஜிய நிலைக்கு கொண்டுவரப்படும் தண்ணீரை  ஏன் ஆலைகள் நொய்யல் ஆற்றில் வடிக்கவேண்டும்?. சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் அந்த தண்ணீரையே ஆலைப்பணிகளுக்கு எடுத்துக்கொள்ளலாமே!  சுத்திகரிப்பின்போது ஆவியாகும் நீர் இழப்பை ஈடு செய்வதற்காக மட்டுமே தேவைப்படும் புதிய
தண்ணீரைப்பெற்றுக்கொள்ளலாமே! ஏன் இவ்வாறன நடைமுறையை  ஆலைகள் மேற்கொள்ளவில்லை?.

ஆற்று நீரை மாசு படுத்தியவர்கள் கோடியில் புரள்கிறார்கள். விலை <உயர்ந்த வெளிநாட்டுக்கார்களில் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் பறக்கிறார்கள். இவர்கள் அடைந்த  இலாபத்தின் ஒரு  பகுதியை செலவிட்டு தண்ணீரை சுத்திகரிக்கவேண்டும்.

இதற்காக அரசுகள் மக்களின் வரிப்பணத்தை செலவிட்டுவிடக்கூடாது. இவ்வாறான எச்சரிக்கையை  ஏற்கனவே உச்சநீதிமன்றம் விடுத்துள்ளது.
இதை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்வில்லை. மாறாக உதாசீனப்படுத்தி வருகிறது.

இப்போது ரூ127.4 கோடியை வட்டியில்லா கடனாக சுத்திகரிப்பதற்கு கொடுப்பதால் நீர் மாசுபடுவது நின்று விடாது. இதனால் சுத்தமான தண்ணீர் நொய்யல் ஆற்றில் ஓடப்போவதும் இல்லை.

சுத்திகரிப்பு என்ற பெயரில் ஏராளமான பணம் இது வரை வீணடிக்கப்பட்டுள்ளது.அந்தப்பெரும் தொகையுடன் இந்தத்தொகையும் சேரப்போகிறது அவ்வளவுதான்!

கட்டப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் பகல் நேரத்தில் சாயக்கழிவுநீரை  தேக்கி வைப்பதற்கும், நள்ளிரவில் நொய்யல் ஆற்றில் திறந்து விடுவதற்குமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சுத்திகரிப்பு என்ற பெயரில் நமக்கு நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.

இதற்கு அரசும் துணை போவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ்நாடு வளர்ந்த நாடுகளின் குப்பைத்தொட்டியல்ல என்பதை இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் உணரவேண்டும்.

இதற்காக தமிழ்நாட்டில் ஏற்றுமதியின் பொருட்டு இயங்கிவரும் சாய சலவை ஆலைகளை மூடி விடவேண்டும். மேற்கொண்டு மாசுபடுத்தும் ஆலைகள் தமிழ்நாட்டில் உருவாவதற்கு நிரந்தர தடை விதிக்கவேண்டும்.

உள்நாட்டுத்தேவைக்கு மட்டுமே இவ்வாறன ஆலைகளை அரசு அனுமதிக்கலாம். இதுவே நிரந்தர தீர்வு. என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
   

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்