வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 15 அக்டோபர், 2013

குளிக்க செல்லும் பக்தர்களை காவு வாங்கும் காவிரி. கண்டுகொள்ளாத அரசு நிர்வாகம்.



ஈரோடு மாவட்டத்தில் உள்ளது கொடுமுடி.

ஈரோடு கரூர் முக்கிய வழித்தடத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது.
ஈரோட்டிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த
கொடுமுடியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த


வன்னிமரம் உள்ளது.kodumudi sirappu paarvai
இந்த மரத்தின் இலையில் வலது பக்கம் முள்ளும் இடது பக்கம்
முள்ளும் இல்லாமல் காணப்பபடுவது அதிசயம்.

தேவராப்பாடல் பெற்ற 247 ஸ்தலங்களில் கொங்கு நாட்டில்
முக்கியமாக கருதப்படும் ஏழு சிவஸ்தலங்களில் ஆறாவது ஸ்தலமாக
உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள
பிரம்மாவின் சந்நிதியில் இந்த வன்னிமரம் அமைந்துள்ளது.


ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் பழனிக்கு தீர்த்த
யாத்திரை செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடிக்கு வந்து
காவிரி நீரை கலசங்களில் நிரப்பி இந்த வன்னிமரத்தின் இலைகளை
கலசங்களில் இட்டுச் செல்வது வழக்கமாக உள்ளளது.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒரே வளாகத்தில்
அமைந்துள்ள இந்த ஸ்தலத்தில் பக்தர்களுக்கு அருள்
பாலிக்கின்றனர்.


சுயம்பு மூர்த்தியாக சிவன் விளங்குகிறார். தவிர திருநள்ளாறை
அடுத்து சனி பகவான் அதே கோலத்தில் இந்த ஸ்தலத்தில்
விளங்குவதால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு
சனிதோஷமானது நீங்கி திருநள்ளாறு சென்று வந்த பயனை
கொடுக்கிறது என்ற ஐதீகம் உள்ளது.

பாண்டிய மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஊருக்கு
திருப்பாண்டிக்கொடுமுடி என்ற சிறப்பு பெயரும் உண்டு. அப்பர்
,சுந்தரர், சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் இந்த ஸ்தலதிற்கு வந்து
சிவன் மற்றும் தமிழ்கடவுளாம் முருகன் குறித்து பாடல் பாடியுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக இந்த நகருக்கு வந்து
செல்கின்றனர்.

குறிப்பாக கர்நாடகா மாநிலத்திலிருந்து வாரம்தோறும் சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தர்கள் இங்கு வந்து
பிரம்மாவிற்கு சிறப்பு பூஜைகள் நடத்திச்செல்கின்றனர். இதனால்
மறுபிறவி நீங்குகிறது என்றும் நம்புகின்றனர்.

இந்தியாவில் பிரம்மாவிற்கு என அமைந்த குறிப்பிட்ட கோயில்களில்
இது முக்கிய கோயிலாக விளங்குகிறது.

காலஞ்சென்ற திரைப்பட நடிகையும் பாடகியுமான புகழ்பெற்ற கே.பி.
சுந்தராம்பாளின் சொந்த ஊரான இந்த ஊருக்கு காஞ்சி பெரியவர்
வந்து சென்றுள்ளதால் அவர் பெயரில் இங்கு ஒரு பள்ளியும் நடந்து
வருகிறது.

புகைவண்டி நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு
மருத்துவமனை, நீதிமன்றம், ஒன்றிய அலுவலகம் அரசு கரூவூலம்.
என முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள இந்த ஊருக்கு அன்றாட
அலுவலுக்கு வரும் பலரும் ஸ்வாமி தரிசனம் செய்வதற்காக
மகுடேஸ்வரர் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம்.

இப்படி பக்தியுடன் செல்லும் பக்தர்கள் கோயிலின் எதிரே செல்லும்
காவிரியில் நீராடி ஸ்வாமி தரிசனம் செய்வது மரபு.

இந்த மரபைக்கடைபிடிக்க பக்தர்கள் செய்யும் முயற்சியில்
ஆண்டுக்கு 20 பக்தர்களையாவது காவிரி கபளீகரம் செய்துகொள்வது
வழக்கமாக உள்ளது.


இதற்கு , பக்தர்கள் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள
படித்துறையில் சுழல்கள் இருப்பதும், காவிரியில் நீரோட்டம் வேகமாக
இருப்பதும் காரணமாகும்.

உள்ளூர் மக்கள் படித்துறையின் ஆபத்து குறித்து அறிந்திருக்கும்
நிலையில் அவர்கள் அதனை தவிர்த்து விடுகின்றனர்.

ஆனால் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் காவிரியின் ஆபத்து
குறித்து அறியாமல் சென்று அபாயத்தில் மாட்டிக்கொண்டு உயிரை
இழக்கின்றனர்.

இந்த உயிரழப்புகள் தொடர்ந்தபோதும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி
இன்னும் கிடைக்கவில்லை.

தமிழக அரசு இந்த நகரை புராதன நகராக அறிவித்துள்ளது.
மாவட்டத்தின் புராதன நகரான இதனை அழகு படுத்த நிதியும்
ஒதுக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிதியைக்கொண்டு படித்துறையில் பக்தர்கள் குளிக்கும்
இடத்தில் ஒரு தடுப்பு வேலி அமைத்தால் பல உயிர்கள் பலியாவது
தடுக்கப்படும்.

இது குறித்து மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., ஆர்.என்.
கிட்டுச்சாமியிடம் கேட்டபோது திட்டம் தீட்டப்பட்டு அரசுக்கு
அனுப்பபட்டு தீர்வு தரப்படும் என்றார்.

பக்தர்களின் உயிர்கள் காவிரியினால் காவு வாங்குவது
தொடர்கதையாகி வருகிறதே இது குறித்து என்ன தீர்வு
வைத்துள்ளீர்கள் என்று கொடுமுடி பேரூராட்சி தலைவர்
சரவணனிடம் கேட்டபோது இந்த சம்பவங்களை தவிர்க்க
பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது என்றார்.

சம்பவங்கள் குறித்து அறிந்தவரும் சமூக ஆர்வலரும், இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான
ஆறுமுகத்திடம் கேட்டபோது ஒரு நீண்ட விளக்கத்தையே
கொடுத்தார்.

ஒவ்வொரு முறை அரசு அதிகாரிகளும், அரசியல்பிரமுகர்களும்
சொல்வதையே திருப்பி திருப்பி சொல்லிவருகின்றனர்.
ஆட்சிகள் மாறி மாறி வந்தபோதிலும் இந்த காட்சி மட்டும் அப்படியே
உள்ளது என்றார்.

பரிகார ஸ்தலமாக விளங்கும் கொடுமுடிக்கு வரும் பக்தர்கள் தங்களது
பிரச்சனைகள் தீர வேண்டும் என்று இங்கு வருகின்றனர். இங்கு வந்த
பின்னர் தங்களது உயிர்களையும் தங்களது சொந்தங்களையும்
காவிரியில் இழப்பது தொடர்கதையாகி வருகிறது.

 இதற்கு தமிழக
அரசு காவிரியில் தடுப்பு அரண்கள் அமைப்பது மூலமாக தொடரும்
உயிர்பலிகளுக்கு ஒரு பரிகாரம் தேடவேண்டும்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்