வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 15 அக்டோபர், 2013

வெங்கம்பூர் தொடக்கவேளாண்மை வங்கியில் மோசடி . வங்கியின் தலைவர்மீது ஆட்சியரிடம் புகார். பரபரப்பானது கிராமம்.


 ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வடக்குப்புதுப்பாளையம் தொடக்கவேளாண்மைக்கூட்டுறவு வங்கியில் வங்கியின் தலைவராக இருப்பவரே வங்கியிடமிருந்து மோசடியாக கடன் பெற்றுள்ளார்.
என்ற புகார் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்துள்ளது வெங்கம்பூர். இந்த ஊரில் உள்ளது கே.26 தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி. இந்த வங்கியின் தற்போதைய தலைவராக இருப்பவர் நல்லசாமி. வெங்கம்பூர் பேரூர் அ.தி.மு.க செயலாளராகவும் இவர் இருந்து வருகிறார்.


இந்த வங்கி கடந்த 1974 ல் துவங்கப்பட்டது. 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் வங்கியின் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுக்கு பலகோடி அளவில் நிதியை கையாண்டு வரும் இந்த வங்கியின் தற்போதைய இயக்குநர்களாக மொத்தம் 11 பேர் உள்ளனர். இவற்றில் நான்கு பேர் தி.மு.க வையும், ஒருவர் காங்கிரஸ் கட்சியையும் சார்ந்தவர்கள். மீதம் உள்ள 6 பேர் அ.தி.மு.க வைச்சேர்ந்தவர்கள்.


இந்த வங்கிகுறித்து இதே  ஊரைச்சேர்ந்த நேசலிங்கம் என்பவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் ஒரு புகார் மனு தந்துள்ளார். வங்கியின் தற்போதைய தலைவரான நல்லசாமி, வங்கியின் தலைவராக இருப்பதற்கு கூட்டுறவு சட்டவிதிகளின்படி தகுதியற்றவர்.  வங்கியின்  அதிகார வரம்பு எல்லைக்குள் வசிக்காதவர். விதிமுறையை மீறி வங்கியின் தலைவராக உள்ளார்.


பயிரடப்படாத தரிசு நிலத்தைக்காட்டி இவர் உறுப்பினராக உள்ள குழு மூலம் இரண்டு லட்சத்துக்குமேல் வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இதே போல மஞ்சள் பயிர் கடன் பெற்று வருகிறார். என்று புகார் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் விபரங்களை அறிந்துகொள்ள வடக்குப்புதுப்பாளையம் கிராமத்திற்கு சென்று  சம்பந்தப்பட்ட வங்கியின் உறுப்பினராக உள்ள நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு  செயலாளராகவும், வங்கியின் உறுப்பினராகவும் உள்ள குழந்தைவேல் என்பவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
 வங்கியின் தற்போதைய தலைவர் நல்லசாமி 1998 க்கு முந்தைய தவறான முகவரியை கொடுத்து  பதவியில் நீடித்து வருகிறார். 

இவ்வாறு  தவறான முகவரிக்கு உரிய அடையாள அட்டையை காட்டி பொறுப்பில் நீடிப்பது சட்டத்துக்கு புறம்பானது.

வங்கியின் அதிகார எல்லைக்கு அப்பால் உள்ள இச்சிப்பாளையம் கிராமத்தில் அவரது குடியிருப்பு உள்ளது. உறுப்பினராக இருப்பதற்கே தகுதில்லாதவர்.
கடந்த 13 ஆண்டுகளாக இச்சிப்பாளையம் கிராமத்திலேயே குடியிருந்து வருகிறார். ரேஷன் கார்டு, மற்றும் இச்சிப்பாளையம் தொடக்கவேளாண்மை வங்கியிலும் உறுப்பினாராக இருந்து  கடன் பெற்றிருக்கிறார்.

மற்றும் தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் போன்ற பொருட்களையும் பெற்றிருக்கிறார்.

 தவிர இவர் அங்கம் வகிக்கும் கூட்டுப்பொறுப்பு குழு வழியாக  இச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள தரிசு நிலத்தைக்காட்டி  கடன் பெற்றிருக்கிறார்.
பயிர் செய்யாமலே இப்படி கடன் பெறுவது சட்டத்துக்கு புறம்பான செயல். எனவே இவர்மீது சம்பந்தப்பட்ட துறையினரும் தமிழக முதலமைச்சரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் தந்துள்ளோம் என்றார்.

புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவராக உள்ள நல்லசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
 கடந்த 1989 முதல் வடக்குப்புதுப்பாளையம் தொடக்கவேளாண்மை  கூட்டுறவு வங்கியில்  உறுப்பினராக உள்ளேன். வேறு எந்த வங்கியி<லும் நான் உறுப்பினராக இல்லை.

வேறு இடத்தில் இருந்து கொண்டு வங்கியின் தலைவரானேன் என்ற புகார் எனக்கு பொருந்தாது. தற்போது எனது சூழ்நிலையின் காரணமாக பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் இருக்கிறேன்.

 இன்னும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்துக்குள் எனது பழைய இடத்துக்கே வந்துவிடுவேன். முகவரி மாற்றம் மட்டும் செய்யப்பட்டிருக்கிறதே தவிர அங்கேயே இருப்பேன் என்று சொல்லவில்லை.

கூட்டுப்பொறுப்பு குழு மூலம் கடன் பெற்றிருப்பதாக தகவல் வரவில்லை. எல்லோருமே பயிரிடும் பயிர்களுக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள்.
 இது கடந்த ஐந்து ஆறு ஆண்டாக நடந்து வருகிறது. நான் தலைவராவதற்கே முன்பிருந்தே இந்த செயல் உள்ளது.

இதில் எந்தவிதமான தவறு நடப்பதற்கு ஒத்துழைப்பு தரவில்லை, தரப்போவதும் இல்லை. ஆட்சியரிடம் தந்துள்ள புகாரின் படி சும்மா கிடக்கும் பூமிக்கு நான் குத்தகைசீட்டு வாங்கவில்லை.

 தலைவர் என்ற முறையில் என்னிடம் யாரும் புகார் தரவில்லை. அப்படி புகார் தந்தால் அது என்மீது இருந்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். என்றார்.

சம்பந்தப்பட்ட வங்கியின் தற்போதைய தலைவரும், வங்கியின் உறுப்பினர்களும் மாறி மாறி கருத்து தெரிவித்துவரும் நிலையில் கடந்த 1974ல் துவங்கப்பட்ட இந்த வங்கி நல்ல நிதிநிலையுடன் செயல்பட்டுவருவது நீடிக்குமா அல்லது நஷ்டத்துக்குள்ளாகுமா? என்ற அச்சத்துடன் வங்கியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் தற்போது உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்