வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 7 செப்டம்பர், 2013

வரும் ஆனால் வராது பாணியில் இயக்கப்படும் பேருந்துகளினால் நொந்துபோகும் பயணிகள்.




  ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு வரும் பேருந்துகளில் பல, வரும்  ஆனால் வராது ,பாணியில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.


ஈரோடு மாவட்டத்தில் உள்ளது சிவகிரி பேரூராட்சி. மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள  இந்த பேரூராட்சி  மொடக்குறிச்சி தொகுதியிலேயே அதிக வாக்காளர்களையும், அதிக மக்களையும் கொண்டதாகும்.

இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவரும் இந்த நகரின் முக்கிய தொழிலாக நெசவு, மின்சாதனபொருட்கள் விற்பனை நிறுவனங்கள், உழவு தொழிலுக்கு உதவியாகும் வகையிலான கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாயம் ஆகியவை உள்ளன.

நகரில் ஐந்து வங்கிகள், காவல்நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், மருத்துவமனைகள், ஆயுள்காப்பீட்டு நிறுவனம், அரசு கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி,  அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகள், திரையரங்கம், என பல  நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்காகவும்,  நிறுவனங்களின் சேவையை பெறுவதற்காகவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிவகிரிக்கு  வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்களில் 99 சதவிகித மக்கள் பேருந்துகளையே நம்பி உள்ளனர்.


தாராபுரம், வெள்ளகோயில், முத்தூர், காங்கேயம், கொடுமுடி, கரூர், ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வரும் மக்களும் ,அலுவலர்களும்  சிவகிரிக்கு வருவதற்காக  அரசு பேருந்துகள் 27 ம் தனியார் பேருந்துகள் 19 ம் என மொத்தம் 46 பேருந்துகள்  இயக்கப்பட்டு வந்தன.
இப்படி இயக்கப்பட்டு வந்த பேருந்துகளில் பல குறித்த நேரத்துக்கு வராமலும், சில டிரிப்புகள் இயக்கபடாமலும், ஒரு சில பேருந்துகள் ஒரு சில நாள் இயக்கப்பட்டதோடு நின்றே போயும் உள்ளன.

இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலிருந்து வங்கிகளுக்கு வரும் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிரும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊரிலிருந்து அதிகாலையில் உழவர்சந்தைக்காக இயக்கப்பட்டு வந்த ஒரு நகர பேருந்து தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தவிர காலை 8.40 மணிக்கு இயக்கப்பட்டு வந்த நகரப்பேருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இத்துடன் இந்த நகரின் வழியே செல்வற்கான பர்மிட் வாங்கிய தனியார் பேருந்து ஒன்று நகருக்குள் வராமல் மாற்றுப்பாதையில் செல்கிறது.

தனியார் பேருந்துகளின் நேரத்துக்கு முன்னாள் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளில் பல தற்போது தனியார் பேருந்துகளின் நேரத்துக்கு பின்னால் இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்