வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 1 டிசம்பர், 2011

புயலை கிளப்பப்போகிறது

 கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியனில் உள்ள 6 வார்டுகளின் கவுன்சிலர் பதவிக்காக நடந்த தேர்தலில் விஜயலட்சுமி, சுப்பிரமணியம், வீரண்ணன், தமிழ்ச்செல்வி என நான்குபேர் அ.தி.மு,க சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுவெற்றிபெற்றனர்.

மீதம் உள்ள இரண்டு வார்டுகளில் அ.தி.மு.க ஆதரவாளர்கள் வாசுதேவன், வேலுசாமி என்ற சுயேட்சைகள் இருவர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
இதனை அடுத்து சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 29 ம்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் சேர்மன் வேட்பாளராக சுப்பிரமணியத்தை கட்சி அறிவித்தது. அதனை  1 வது வார்டில் வெற்றிபெற்ற அ.தி.மு.க கவுன்சிலர் விஜயலட்சுமி ஆதரித்தார். கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற மற்ற கவுன்சிலர்களான தமிழ்செல்வி, வீரன் ஆகியோர்  ஏற்க மறுத்தனர்.

இந்த நிலையில் சேர்மன் தேர்தலுக்கு முந்தைய நாள் கட்சியின் சார்பில் சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுப்பிரமணியத்தை சிலர் கடத்திவிட்டதாக சுப்பிரமணியத்தின் தந்தை குழந்தைசாமி கொடுமுடி போலிசாரிடம் புகார் தந்தார்.

இந்த புகாரினால் தேர்தல் நாளன்று கவுன்சிலர்கள் ஓட்டுப்போட வராததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தேர்தலில் போட்டியிட விரும்பியதாலும் கடத்தல் புகார் தரப்பட்டதால் போலிசார் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாலும் தாங்கள் தேர்தலில் கலந்துகொள்ளவரவில்லை எனவே, மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கவுன்சிலர் விஜயலட்சுமியை தவிர்த்த மற்ற கவுன்சிலர்கள் நான்குபேர் மனு அனுப்பினர்.

இதன்பேரில் நவம்பர் 30 ம்தேதி கொடுமுடி யூனியனுக்கான தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதற்கிடையே தேர்தலை வீடியோ பதிவுடன் நடத்தவேண்டும், போலிசார் பாதுகாப்பு தரவேண்டும், என்ற கோரிக்கையுடன்  சென்னை ஐகோர்ட்டில்  அந்த  நான்கு கவுன்சிலர்களும்  மனு தந்தனர்.

மனுவின்பேரில்தேர்தலை மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் வீடியோ பதிவுடன் நடத்தவேண்டும். போலிசார் பாதுகாப்பு தரவேண்டும் என்ற உத்தரவை ஐகோர்ட் வழங்கியது.

இந்த நிலையில்  கட்சி அறிவித்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு ஒரு தரப்பினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
இந்த கையெழுத்து இயக்கம் உள்நோக்கம் கொண்டது என்று மறுதரப்பு பதில் தந்தது.

இல்லை மிக சரியாகவே கையெழுத்து இயக்கம் நடந்தது. அதை நிரூபிக்க தயார் என எதிர்தரப்பில் பதில் தரப்பட்டது.

இந்த யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.வி ராமலிங்கம் கவுன்சிலர்களிடையே ஒற்றுமைக்கான பேச்சுவார்த்தையை துவங்கினார்.

அதில் முறிவு ஏற்பட்டது. இதன் எதிரொளியாக கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள் தலைமைக்கு மனு தந்தனர். அந்த மனுவை கண்ட தலைமை பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துமாறு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் கொண்ட குழுவை அமைத்தது.

அந்த குழு கட்சி சின்னத்தில் வெற்றிபெற்ற நான்கு கவுன்சிலர்களிடம் இரண்டு சுற்றுபேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த நிலையில் நேற்று நவம்பர் 30ம்தேதி காலை 10.30 மணிக்கு கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல் நடந்தது.

தேர்தலில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கவுன்சிலர் சுப்பிரமணியமும் கலந்துகொண்டு சேர்மனாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை மற்றொரு அ.தி.மு.க வேட்பாளர் விஜயலட்சுமி முன்மொழிந்தார். ஆனால் வழிமொழிய மற்ற  கவுன்சிலர்கள் யாரும் முன்வராததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இதனால் எதிர்தரப்பில் சேர்மன் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அ.தி.மு.க கவுன்சிலர் தமிழ்செல்வியின் வேட்பு மனு ஏற்கப்பட்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்செல்வியின் வேட்புமனுவை அ.தி.மு.க கவுன்சிலர்களில் ஒருவரான வீரன் முன்மொழிந்தார். சுயேட்சை கவுன்சிலர் மணி என்கிற வேலுசாமி வழி மொழிந்தார்.

பிறகு பகல் 2 மணிக்கு துணை சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த பதவிக்கு சுப்பிரமணியத்தின் ஆதரவாளரான விஜயலட்சுமி போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை சுப்பிரமணியம் முன்மொழிந்தார். யாரும் வழி மொழிய முன்வராததால் அந்த மனு  நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் துணை சேர்மன் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த மணி என்கிற வேலுசாமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டு அவர் துணை சேர்மனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்புக்கு பின்னர் வெற்றி பெற்றவர்கள் கொடுமுடி நகரசாலைகளில் ஊர்வலமாக அழைத்துசெல்லப்பட்டனர்.

பின்னர் தமிழ்செல்வி, வேலுசாமி,வாசுதேவன், வீரண்ணன் ஆகிய நான்கு பேரும் ஒரே ஜீப்பில்  இச்சிப்பாளையம்,வளந்தான்கோட்டை அஞ்சூர், கொந்தளம், கொம்பனை, கொளத்துப்பாளையம், ஆறாம்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்கு ஊர்வலமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அவர்களுடன் அவர்களது ஆதரவாளர்களும் உடன் சென்றனர்.

இன்று டிசம்பர் 1 ம் தேதி கடத்தப்பட்டதாக கூறப்படும் கவுன்சிலர் சுப்பிரமணியம் கொடுமுடி கோர்ட்டில்  சரணடைவதாக அறிவித்துள்ளார்.  கடத்தல் சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சுப்பிரமணி தன்னை கடத்தியது யார் என தெரியவில்லை, முகத்தில் துணியைக்கட்டிக்கொண்டிருந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் விட்டுவிட்டு சென்றதாகவும் அங்கிருந்து ஊருக்கு வந்ததாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

பல்வேறு திருப்பங்களுடன் சென்றுகொண்டிருந்த கொடுமுடி யூனியனுக்கான சேர்மன் தேர்தல் நேற்று முடிவுக்கு வந்தது. இருந்தபோதிலும் இந்த தேர்தல் முடிவுகள் கொடுமுடி ஒன்றிய அரசியலில் மற்றொரு புயலை கிளப்பப்போகிறது. அடுத்துவரும் நாட்கள் அதற்கான விடையை தரும் என கட்சிவட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்