வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 28 நவம்பர், 2011

புனிதம் கெட்டு வருகிறது

கொடுமுடியில்
சுதந்திரமாக சுற்றித்திரியும் ஆடுகள் மற்றும் பன்றிகளால் பொதுமக்கள் அவஸ்தைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தமிழக அரசால் சுற்றுலா நகரமாக அறிவிக்கப்பட்ட நகரம். இந்த நகரத்துக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர்.

கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர்கோயிலில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தனித்தனி சந்நிதிகளில் ஒரே வளாகத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான வன்னிமரத்தின் கீழ் வீற்றிருக்கும் பிரம்மாவை தரிசனம் காண கர்நாடாகவிலிருந்து பக்தர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
அரசியல் நட்சத்திரங்கள் மட்டும் அல்லாது திரையுலக நட்சத்திரங்களும் இந்தக்கோயிலுக்கு அடிக்கடி வருவதுண்டு.

இதனால் நகரில் உள்ள வணிக கடைகள் பல இந்தக்கோயிலுக்கு வரும்  பக்தர்களை நம்பியே செயல்பட்டுக்கொண்டுள்ளன.



தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்லும் இந்த நகரத்தில் காவிரிஆற்று படித்துறை , திருமாடவீதி, மாரியம்மன்கோயில் வீதி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஆடுகள் சுதந்திரமாக கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

இதனால் வாகனங்களில் வருவோரும் பொதுமக்களும் மிகுந்த பாதிப்புள்ளாகிவருகின்றனர்.
இது தவிர காவிரி ஆற்றின் கரையில் பக்தர்கள் பலர் நவீன கழிப்பிடங்களை  பயன்படுத்தாமல் சுதந்திரமான போக்கை கையாள்வதால் அசுத்தங்கள் பெருகிவருகிறது.

கரையில் நடக்க முடியாத அளவில் காட்சிதரும் அசுத்தங்கள்  நகரத்தின் பெயரை மட்டும் அல்லாது சுகாதாரத்தையும் பாதித்துவருகிறது.
அந்த இடத்தில் கூட்டம் கூட்டமாக பன்றிகள் உலா வருகின்றன. பல நேரங்களில் இந்த பன்றிக்கூட்டம் காவிரியின் கரையில் பூஜை பொருட்களை விற்றுவரும் தற்காலிக கடைகளிலும் புகுந்து தங்கள் கைவரிசை காட்டிவருகின்றன.

இதனால்  இந்த கடைகளில் வழிபாட்டிற்கு விற்பதற்காக வைத்துள்ள பொருட்களின் புனிதம் கெட்டுவருகிறது.

நகரின் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும்பேண பன்றிக்கூட்டங்களை யும், ஆட்டுக்கூட்டங்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், நகரில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் வழிபாட்டு பொருட்களை விற்றுவரும் கடைகளிலிருந்து எரியப்படும் கழிவுகளை  திறந்தவெளியில் கொட்டாமல்  பார்த்துக்கொள்ளவேண்டும்.

அத்துடன் இந்த வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை  அடிக்கடி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்