வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

1210 கோடியில்தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டத்துக்கு தி.மு.க ஆதரவு.




ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் கால்வாய்க்கு காங்கிரீட்

தளம்அமைக்க  தமிழக அரசு கொண்டு வந்த திட்டத்துக்கு எதிர்கட்சியான தி.மு.க

ஆதரவு தரும் நிலையில்
விவசாயிகள் இரண்டு பிரிவாக பிரிந்து ஆதரவும்

எதிர்ப்பும் தெரிவித்து மனுக்களை மலையாகவும் போராட்டங்களை அன்றாட

நிகழ்வாகவும் நடத்தி வருவதால் மாவட்டம் கலகலத்துவருகிறது.

கடந்த 50 களில் காமராஜர் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட திட்டம்
பவானிசாகர் அணை திட்டம். சுமார் இருநூற்று பத்து கிலோ மீட்டர்  தொலைவுக்கு பயணித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 3 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நேர்முகமாகவும் ,மறைமுகமாக பச்சை ஆடையைபோர்த்திவரும் கீழ்பவானி கால்வாய்க்கு காங்கிரீட் அமைக்கும்  திட்டம் கடந்த தி.மு.க ஆட்சியின்போது கவனத்தில் எடுக்கப்பட்டு, பின்னர் என்ன காரணத்தினாலோ மறக்கப்பட்டது.

தற்போதைய அ.தி.மு.க அரசு  கடந்த ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்துக்கு உலக வங்கி நிதி உதவியுடன் 1210 கோடியில் உயிர் கொடுக்க முடிவு செய்துள்ளது. 

அரசின் முடிவு குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன? என்று எவரையும் கேட்கவேண்டிய வாய்ப்பே தராமல் ஈரோடு மக்களின் அன்றாட  வாதத்துக்கும், வாசிப்புக்கும் முக்கிய உணவாகி வருகிறது  இந்த திட்டம் குறித்த நிகழ்வுகள்.
இது குறித்து அறிந்துகொள்ள ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு  கடந்த 5 ம்தேதி பயணித்தோம்.., பயணத்தின் முடிவில் பார்த்த காட்சி வியப்பை தந்தது.

 நூற்றுக்கணக்கில் விவசாயிகள் தங்களது கைகளில் மனுக்களை ஏந்தியபடி  மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்திருந்தனர். அவர்களில் வயதானவரும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவருமாகிய வெங்கடாசலத்திடம் பேசினோம்.

பவானிசாகர் அணையிலிருந்து  கரூர் மாவட்டம் அஞ்சூர் வரையிலான 125 ஊர்களைச்சேர்ந்த விவசாயிகள்  கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்துள்ளோம். கால்வாயில் காங்கிரீட் தளம் அமைத்தால் கோபி, ஈரோடு போன்ற பெரு நகர மக்கள் குடிநீர் ஆதாரத்தை இழப்பர். அதே நிலைதான் கிராமங்களுக்கும் ஏற்படும்.

இந்த கால்வாய்  நீரால் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இது தவிர இந்த கால்வாய் கசிவு நீரால் ஒரு லட்சம் ஏக்கர்களில் கரும்பு, மஞ்சள், வாழை போன்ற நீண்ட கால பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

காங்கிரீட் தளம் அமைந்தால் இந்த நிலங்கள் பயனற்றுப்போய்விடும்.

கிணறுகள் பயனற்று போய்விடும். இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டியே மனுக்களை தந்துவருகிறோம். இது குறித்து தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுத்து திட்டத்தை கைவிடும் அறிவிப்பை விடுவார். அந்த அறிவிப்பு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

இந்த சந்திப்புக்குப்பின்னர் ஆகஸ்ட் 22 ம்தேதி பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி பேரூராட்சியைச்சேர்ந்த சுயேட்சை கவுன்சிலர்கள் நந்தகுமார், ஜெயா, காந்திமதி, முருகன், முத்துசாமி ஆகிய ஐந்துபேர்  தங்களது கைகளில் கடிதங்களைதாங்கியபடி ஆவேசமாக வந்தனர் மாவட்ட ஆட்சியரைச்சந்திக்க. என்ன விஷயம் என்று கேட்டோம்.

காங்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் பதவியை ராஜினாமா செய்து.. ராஜினாமா கடிதத்தை கலெக்டரிடம் தரப்போகிறோம் என்றனர் அதிரடியாக.

  நடப்பதை உற்றுக்கவனித்தபடி இருந்தோம்.  குறைகேட்கும் அரங்கில் அமர்ந்திருந்த ஆட்சியர் சண்முகத்தை சந்தித்த அந்த ஐந்து கவுன்சிலர்களும் அவர் கையில்   தங்களது ராஜினாமா கடிதத்தை தந்தனர்.

அதனைப்படித்துப்பார்த்த ஆட்சியர் சண்முகம்.. உங்களது ராஜினாமாவை தரவேண்டிய இடம் இந்த அலுவலகத்தில் உள்ள பேரூராட்சி இணை இயக்குனர் அலுவலகம். அவர்தான் இந்த கடிதத்தை பெறவேண்டியவர்.இருந்தாலும்... உங்கள் கடித்தத்தை ஏற்றுக்கொள்கிறேன் ராஜினாமாவாக அல்ல மனுவாக என்றார் புன்னகையுடன்.

இந்த காட்சி அரங்கேறிய மறுநாளே ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆக்ஸ்போர்டு ஹோட்டலில் உள்ள அரங்கில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்தவர்கள் கீழ்பவானி கூட்டமைப்பின் தலைவர் காசியண்ணன், செயலாளர் வடிவேல், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும்  கால்வாய் பாசன அமைப்பை சேர்ந்த 33 பாசன சபையினர். அவர்களின் மத்தியில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். முன்னாள் மத்திய மாநில அமைச்சரும் தி.மு.க வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான சுப்புலட்சுமி ஜெகதீஸன்.

ஆச்சர்யத்துடன்  அவரை அணுகினோம்.. புரிந்துகொண்டவர்.. புன்னகையுடன் பேசத்தொடங்கினார்.

கடந்த 96 ல் தி.மு.க ஆட்சியிலிருந்தபோது 99 ம் ஆண்டு ஜனவரி 11 ம்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது காங்கிரீட் போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கடைமடைப்பகுதி விவசாயிகளும் பயன்பெறுவர்.

தமிழ்நாட்டில் கீழ்பவானி திட்டத்தைப்போல 17 நீர்பாசன திட்டங்கள் உள்ளன.
 கீழ்பவானியை தவிர மற்ற திட்டங்கள் மராமத்து பணிகள் செய்யப்பட்டுவிட்டன.

ஈரோடு மாவட்டத்தைச்சுற்றியுள்ள அமராவதி, பரம்பிக்குளம், ஆழியாறு, சரவங்க ஆகியவை காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டு கட்டுமானங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே கீழ்பவானி பாசனத்திட்டத்தை  சீரமைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

 கடைமடை பகுதிக்கும் உரிய நீரை வழங்கும் இத்திட்டத்துக்கு எல்லோரும் ஆதரவு தரவேண்டும். வேளாண் குடும்பத்தில் பிறந்துள்ள நமக்குள் காங்கிரீட் தளம் அமைப்பது குறித்து வேறுபாடான கருத்துக்கள் நிலவுவது ஏற்புடையதல்ல.

 கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகள் யாருடைய உரிமையையும் பறிக்காமல் பற்றாக்குறையால் தவிக்கும் பாவப்பட்ட கடைக்கோடி மதகு விவசாயிகளுக்குரிய தண்ணீரை வழங்கும் இத்திட்டத்துக்கு எல்லோரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்றார்.

இந்த சந்திப்பு நடந்து ஒரு நாள் கழிந்தபோது ஆகஸ்ட் 15 சுதந்திரதினம் வந்தது. மாவட்டமே சுதந்திர தினத்தை சுறுசுறுப்புடன் கொண்டாடிக்கொண்டிருந்தபோது.... ஈரோடு வீரப்பன் சத்திரம்போலிசாருக்கு அந்த தகவல் வந்தது.

பெரியசேமூர் பகுதியில் சில வீடுகளில் கருப்புக்கொடி பறப்பதாக வந்த தகவல் அதிர்ச்சியூட்டியது.  அதிர்ச்சியுடன் கிளம்பிய போலிசார் அவசரஅவசரமாக கருப்புக்கொடியை கழட்டி விட்டு சண்முகம்(65) பொடாரன்(64) மாரப்பகவுண்டர்(77) சாதிக்(25) முஸ்தபா,வசந்தகுமார் என்ற ஆறுபேரை அள்ளிக்கொண்டு வந்தனர் ஸ்டேசனுக்கு.

அவர்களைச்சந்தித்த நாம் அவர்களில் முக்கியஸ்தராக சொல்லப்பட்ட சண்முகத்திடம் பேச்சுக்கொடுத்தோம்.
கீழ்பவானி  பாசன கால்வாய் காங்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தை துவங்கியுள்ளோம்.

 கீழ்பவானி அணை மண்ணால் ஆனது. அதன் கரைகளும் மண்ணால் ஆனது. இந்த அணை கட்டப்பட்டு60 ஆண்டுகள் ஆகிறது. 10.34 கோடியில் கட்டப்பட்ட இந்த அணைக்கான தண்டத்தீர்வை, தண்ணீர் வரியை அரசு, விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து விட்டது. தவிர பாசன கரைகளில் முளைத்திருந்த மரங்களை விற்றதன் மூலம் ரூ500 கோடியை பார்த்தாகி விட்டது.

மழைநீர் சேமிப்புக்காக அரசு விளம்பரம் செய்து வருகையில் மண்ணால் அமைந்துள்ள வாய்க்காலின் கரைகளுக்கு காங்கிரீட் தளம் அமைக்க தேவையில்லை.

இதனால் பாசனக்கிணறுகள் பயனற்று போய்விடும். உலக வங்கி

உதவியுடன் கால்வாயில் காங்கிரீட் தளம் அமைத்தால் அதற்கான வட்டித்தொகை ரூ 4 ஆயிரம்கோடி விவசாயிகளின் தலையில் விழும். எனவே   இயற்கையான நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ள கீழ்பவானி பாசன கால்வாய்க்கு காங்கிரீட் தளம் அமைப்பதற்கான எதிர்ப்பு இயக்கம் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினோம் என்றார்.

இந்த சந்திப்பை அடுத்து வந்த தினங்களில் சரியாக சொன்னால் ஆகஸ்ட் 22 ம் தேதி ஈரோடு திருப்பூர் மாவட்ட எல்லைப்புற நகரமான அறச்சலூரில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில்  கள்  புகழ் நல்லசாமி தலைமையில் கூட்டம் ஒன்று நடப்பதாக தகவல் கிடைத்தது.

சென்றோம்... நடந்தவற்றை கவனித்தோம்..

இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அமர்ந்திருந்த  அந்த கூட்டத்தில்  காங்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  பலர் பேசினர்.

அவர்களில்

 நடுத்தர வயதுடைய ஒருவரின் பேச்சு  பார்வையாளர்கள் பலரின் கவனத்தை கவர்ந்தது.

 தந்தையின் கருத்துக்கு எதிராக தனயன்  பேசிய கருத்தைக்கேட்கத்தான்  பார்வையாளர்கள் தங்களது காதுகளை விரைப்பாக்கிக்கொண்டு கவனித்தனர்.

 நாமும் கவனித்தோம்..

அப்பா வடிவேல் ஆக்ஸ்போர்டு ஹோட்டலில்  கீழ்பவானி கூட்டமைப்பின் செயலாளர் பதவியில் இருந்துகொண்டு காங்கிரீட் தளம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டு இருக்க, மகன் மணி அவருக்கு எதிரான கருத்தைக்கொண்டுள்ள அமைப்பில் இணைந்துகொண்டு.. பேசியது தான் அந்த அந்த கவனத்துக்கு காரணம்.

மணி பேச்சிலிருந்து சில துளிகள்...

 பொதுவாக இளைஞர்களுக்கு உடலில் கொழுப்பேறும்... வயதாகிவிட்டாலோ மூளையில் கொளுப்பேறும்.. இந்த மூளையில் கொழுப்பேறியவர்களை கண்டுகொள்ளதேவையில்லை.

 மஞ்சள் மண்டி நடத்துபவர்களும்...விடுதி நடத்துபவர்களும்.. பள்ளிகளை நடத்துபவர்களும் விவசாயிகள் என்ற பெயரில்... விவசாயிகளுக்கு எதிராக கருத்துக்களை கூறிவருகின்றனர்.

அவர்களை கண்டுகொள்ளாமல் இந்த எதிர்ப்பு இயக்கம் வலுப்பெறவேண்டும். அதற்கான என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு என்றார் அதிரடியாக.

 தனது தந்தை செய்து வரும் தொழிலை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியதுடன் அவரை மறைமுகமாக நையாண்டி செய்தது  பார்வையாளர்களுக்கு வியப்பை தந்தது.

இந்த நிகழ்வின் முத்தாய்ப்பாக.. மைக்கை பிடித்தார்.. நல்லசாமி .

 கீழ்பவானி தலைமைக்கால்வாய் 124 மைல் இரண்டு பர்லாங், பகிர்வு கால்வாய், கிளைக்கால்வாய் எல்லாவற்றுக்கும் காங்கிரீட் தளம் போடுகின்றனர்.

 இயற்கையான சூழலில் இருக்கும் இந்த திட்டத்தை, மழைநீர் சேகரிப்பு திட்டமாக இருக்கும் இந்த திட்டத்தை காங்கிரீட் காடாக மாற்ற பொதுப்பணித்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

 பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு தவறான தகவல்களையும்,  புள்ளிவிபரங்களையும், வழிகாட்டுதல்களையும் கொடுத்துவருகின்றனர்.

 இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படக்கூடிய திட்டம். வரும் மார்ச் மாதத்துக்குள் நமது நாடு அந்நிய கடனை  10 லட்சத்து 32 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தியாக வேண்டும். நமது அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையில் நாலில் ஒன்று வட்டியாக செலுத்தி வருகிறோம்.

இன்றைக்கு ரூபாயின் மதிப்பு 65 ஆகவந்துவிட்டது. ஆங்கிலேயன் நாட்டை விட்டுச்சென்றபோது 1947 ல் ஒரு ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலர்.

 இன்று எங்கே போய்விட்டது  பாருங்கள்.

இந்த கால்வாய் பழசாப்போய்ச்சு பிரிச்சு மேய்கிறேன் என்கிறார்கள், ஏன் கல்லணையை பிரிச்சு மேய்ஞ்சா என்னாகும்.? தஞ்சை பெரிய கோயிலை பிரிச்சு மேய்ஞ்சா என்னாகும்? ஆங்கிலேயன் கட்டுன கட்டுமானங்களை பிரிச்சுமேய்ஞ்சா என்னாகும்? மேட்டூர்அணைய பிரிச்சு மேயவேண்டியதுதானே.

சில ஆதாயத்தின் அடிப்படையில் இத செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இது ஏற்புடையதல்ல, முறியடிக்கபட வேண்டியது. ஏற்கனவே பரம்பிக்குளம் ஆழியாறுல, முல்லைப்பெரியாறுல காங்கிரீட் கால்வாயாக மாத்துனாங்க, அது முழுமையான தோல்வியில போய் முடிஞ்சிருக்குது. ஆக இதுவும் அப்படித்தான் ஆகும்.

வரக்கூடிய காலங்கள்ல இந்த பாசனப்பகுதி பல துன்பங்கள அனுபவிக்கவேண்டியிருக்கும்.

ஒரு கிலோ பெட்ரோலை எரிக்க நான்கு கிலோ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அந்த ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடியவை மரங்கள்தான்.

கோடிக்கணக்கான மரங்கள் இந்த காங்கிரீட் திட்டத்தினால் காணாமல்போகப்போகிறது. அதனால ஏற்கனவே மழை குறைவான இந்த பகுதியில் மேலும் மழை குறையும்.

 அதனால்தான் வேண்டி விரும்பி இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று இந்த அரசாங்கத்த கேட்டுக்கிறோம். கட்டாயம் கைவிடுவாங்க என்ற நம்பிக்கை இருக்கு.  அப்படி கைவிடலன நாமும் விடப்போறதில்ல.


கீழ்பவானி திட்டவேலைகள் 1954 ல் காமராஜர் ஆட்சிகாலத்தில் முடிக்கப்பட்டது.

இந்த மாதிரி வலுவான அணையை எங்கும் பார்க்க முடியாது.  அணையே நிரம்பி இருந்தாலும் பக்கத்து கிணறுகளுக்கு நீருற்று இல்ல. அந்த அளவுக்கு வலுவான அணை. மண் அணை என்றாலும் வலுவானது இந்த அணை.

 ஆக இந்த அணை ஆசியாவில் இருக்ககூடிய மிகப்பெரிய மண் அணை.
அதேபோலத்தான் கால்வாய்களும், கிளை கால்வாய்களும், பகிர்வுகால்வாய்களும் மண்ணால் ஆனவை.

  இந்த வாய்கால் ஒரு மைலுக்கு ஒரு அடி கரவுடையது. மரங்களை வெட்டாமல் வாய்க்காலை குறுக்கும்போது தண்ணீர் வாய்காலுக்கு மேல பொங்கிப்போகும். கால்வாய் கொள்ளாது. பழைபடி தட்டுப்பாடுதான் வரும்.
 ஆக திட்டமிடுதல் சரியில்லை.

இதையெல்லாம் யோசிக்காமல் அவங்க செய்றாங்க. அப்படி செஞ்சா விளைவுகள் விபரீதமாக இருக்கும். அதனால் இந்த திட்டத்தை ஆரம்பத்திலேயே கைவிடுவது நல்லது.

அணையின் மொத்த கொள்ளவு 38 டி.எம்.சி. அணையே நிரம்பி இருந்தாலும்

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பகுதி விவசாயிகளுக்கான அணைநீரின் பங்கு .6 டி.எம்.சி மட்டுமே. 32.2 டி.எம்.சி கீழ்பவானிக்கு சொந்தமானது. 1956 ல் தடப்பள்ளி அரக்கன்கோட்டைப்பகுதி ஒரு போக பாசனமாக இருந்தது. அதை 58 ல் இரு போக பாசனமாக மாற்றுகிறார்கள். மாற்றுகிறபோது நம்மிடம் யாரும் கருத்து கேட்கவில்லை.

தண்ணீர் தட்டுப்பாடு காலத்தில் சட்டப்படி உரிமை பெற்ற கீழ்பவானிக்கு தண்ணீர்போகத்தான் மற்ற பகுதிக்கு தண்ணீர் விடவேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் தடப்பள்ளி அரக்கன்கோட்டைக்கு தண்ணீர் திறக்கும்போதே பத்து மாதங்களுக்கு என திறந்துவிடுகிறார்கள். விதிமுறைகளுக்கும் அரசாணைக்கும் புறம்பாக பவானிசாகரில் நீர் திறக்கப்பட்டதால்

நாம்

இதுவரை 15 போகம் கடலையை இழந்துள்ளோம். 8 போகம் நெல்லை இழந்துள்ளோம். 272 டி.எம்.சி தண்ணீரை இழந்துள்ளோம். இது தான் வரலாறு.
காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு தற்போதைய தமிழக அரசின் முயற்சியால்  கடந்த பிப்ரவரியில் அரசிதழில் வெளியிடப்பட்டது.

காவிரி இறுதி தீர்ப்புபடி27.95 டி.எம்.சி மட்டுமே நமக்கு கிடைக்கும். கொடிவேரி பாசனத்துக்கு ஒதுக்கி இருப்பது  8.13 டி.எம்.சி மட்டுமே ஆக நம்மில் நாளில் ஒரு பாகம் மட்டுமே.

காவிரி இறுதி தீர்ப்பில்  கோடைகாலத்தில் தமிழகத்தில் எந்த ஒரு அணையிலிருந்தும் பாசனத்துக்கு நீர் திறக்ககூடாது என்றிருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் எந்த ஒரு அணையிருந்தும் கோடையில் நீர் திறக்கப்படவில்லை.

ஆனால் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பகுதிக்கு மட்டும் வருடம்தோறும் ஏப்ரல் 15 ம்தேதி திறந்துகொண்டிருந்தார்கள். இந்த வருடம் அணையில் தண்ணீர் இல்லாததால் திறக்கவில்லை.

 பவானி சாகர் அணையை குறுவை சாகுபடிக்கு திறக்க கூடாது என்று காவிரி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீன் மாதம் தண்ணீர் விட்டால் அது குறுவை சாகுபடி, ஆனால் இந்த வருடம் ஜீன் 28ல் தடப்பள்ளி அரக்கன் கோட்டைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி இறுதி தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை,  இந்த ஆண்டு குறுவையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டைக்கு தண்ணீர் திறந்துள்ளது.

இது நீதிமன்ற அவமதிப்பாகும்.

 இந்த மாதம் 9 ம்தேதி காலிங்கராயன் கால்வாயில்  நெல்லுக்காக தண்ணீர் திறந்துள்ளனர். இதுவரை கடைபிடிக்கப்பட்ட முறைக்கு மாறாக  கால அளவு குறிப்பிடாமல், காலிங்கராயன் கால்வாயில்  தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

காலிங்கராயன் கால்வாயில் நெல்லுக்காக  தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கீழ்பவானி பாசனப் பகுதிக்கான உரிமை நீர் பறிக்கப்பட்டு கீழ்பவானி பாசனப்பகுதியில்  பயிடப்படும் பயிர்கள் களை எடுக்கும் பருவத்தில் காயப்போகின்றன.

 நீர் மேலாண்மையில் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்ளும் தமிழக அரசு கர்நாடகாவை குறைசொல்லி என்ன பயன்? என்று முடித்தார்.

ஆக வெளிப்புற பார்வைக்கு  காங்கிரீட் தளம் குறித்து நடத்தப்படும் சர்ச்சைகள் தான் இவை   என்று   சாதாரணமாக தோன்றினாலும் வரக்கூடிய காலங்களில்  விவசாயிகளுக்கிடையே மிகப்பெரிய பிளவையும் வன்முறையையும் உண்டுபண்ணக்கூடிய வில்லங்கத்துக்கான சமிக்ஞைகள் தான் இவை என்பதில்  சந்தேகம் இல்லை. 


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்