வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 15 பிப்ரவரி, 2012

வாழும் கலை?









 







கொடுமுடியில் உள்ள புகழ்பெற்ற மகுடேஸ்வரர்கோயிலுக்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்
வருகை தந்தார்.

கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர்கோயில் புகழ்பெற்ற கொங்கு ஏழு ஸ்தலங்கள் என்றழைக்கப்படும் கோயில்களில் ஒன்றாக உள்ளது.
இந்தக்கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள், அரசியல்பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள், நீதித்துறை வல்லுநர்கள் என பல தரப்பினரும் வந்து செல்கின்றனர்.

கர்நாடாகாவிலிருந்தும்  அதிகப்படியான பக்தர்கள் வருகை தருகின்றனர். பரிகார ஸ்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் இந்தக்கோயிலில் இந்துக்களின் முக்கிய தெய்வங்களாக வழிபடப்பட்டுவரும் சிவன் மகுடேஸ்வரர் என்ற பெயரிலும், விஷ்ணு வீரநாராயணப்பெருமாள் என்ற பெயரிலும் பிரம்மாவும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர்.

நாயன்மார்களின் பாடல் பெற்ற கோயிலான இந்தக்கோயில் காவிரி நதிக்கரையில்  கடந்த ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பபட்டது. சிவன் சுயம்பாக வீற்றிருக்கும் இந்த ஸ்தலத்தில் ஸ்தல விருட்சமான வன்னிமரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்பபடுகிறது. தவிர திருநள்ளாரில் சனிபகவான் வரம் தரும் மூர்த்தியாக மேற்கு நோக்கி வீற்றிருப்பதுபோல இந்தக்கோயிலிலும் சனிபகவான் மேற்குநோக்கி வீற்றிருந்து வரம் தரும் மூர்த்தியாக இருக்கிறார்.

இதனால் திருநள்ளாறு சென்ற பலன் இந்த கோயிலுக்கு வரும்போது கிடைக்கும்  என சொல்லப்படுகிறது. இப்படி பல சிறப்புகளை உள்ளடக்கிய இந்தக்கோயிலுக்கு  நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தனது வாழும் கலை அமைப்பை நிறுவியுள்ள பண்டிட் ரவிசங்கர் வருகை தந்தார்.
தனியார் ஹெலிகாப்டரில் வந்த அவரை அவரது சீடர்கள் கொடுமுடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விளையாட்டு மைதானத்தில்  அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வேத மந்திரங்களைக்கூறி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

பின்னர் அவர் காரில் மகுடேஸ்வரர்கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு சிவாச்சாரியர்கள் மற்றும் அவரது சீடர்கள் பூரணகும்பத்துடன் யானை சகிதமாக எதிர்கொண்டு வரவேற்றனர்.

இதனை ஏற்றுக்கொண்ட ரவிசங்கர் முதலில் மகுடேஸ்வரர்கோயிலுக்குள் சென்று சிவனை வழிபட்டார். பின்னர் திருக்கோயிலை வலம் வந்து வடிவுடையநாயகி, பிரம்மா, வீரநாராயணப்பெருமாள், சனிபகவான், காலபைரவர் ஆகிய மூர்த்திகளை  வழிபட்டார்.

பின்னர் சிவாச்சாரியர்கள்  மற்றும் சீடர்களின் சார்பில் அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. அதனை  ஏற்றுக்கொண்ட ரவிசங்கர் சிவாச்சாரியர்களுக்கு காணிக்கைகள் தந்தபின்னர் காரில் ஏறி ஹெலிபேடுக்கு சென்று காங்கேயம் அருகே உள்ள சிவன் மலையில் ஸ்வாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு சென்றார்.

ரவிசங்கரின் வருகையை தெரிந்துகொண்ட மக்கள் கோயில் முன்பும் உள்ளும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். அவரைக்காண ஈரோடு கரூர், கோபி, காங்கேயம், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து அவரது சீடர்கள் வந்திருந்தனர்.



பாதுகாப்பு ஏற்பாடுகளை பெருந்துறை டி.எஸ்.பி குணசேகரன் மேற்பார்வையில்  கொடுமுடி இன்ஸ்பெக்டர் கலாமோகன் தலைமையில் அறச்சலூர், சிவகிரி, கொடுமுடி, மலையம்பாளையம் ஆகிய ஊர்களிலிருந்து வந்திருந்த போலிசார் மேற்கொண்டிருந்தனர்.




 ரவிசங்கர் வருகைக்கான  ஒருங்கிணைப்பை வாழும் கலை அமைப்பின் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் முரளிதரன் செய்திருந்தார்.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்